யாழ். செம்மணியில் வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்
புதிய இணைப்பு
காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச சுயாதீன விசாரணை மட்டுமே கோருகின்றோம் எனும் தொனிப் பொருளுடன் நீதிக்கான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை வடக்கில் செம்மணியிலும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோயில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக நிறைவு செய்துள்ளனர்.
இப்போராட்டம் 5 ஆவது நாளாக இன்றைய தினம் (1) திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க உறவுகளுடன் அதிகளவிலான பொதுமக்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளும் கலந்து கொண்டிருந்தனர்.
திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செபஸ்தியான் தேவி, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அமல்ராஜ் அமலநாயகி, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான தாமோதரம் பிரதீவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
முதலாம் இணைப்பு
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் யாழ். செம்மணியில் இன்று (01.10.2025) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 1.00 மணிக்கு வரை நடைபெற உள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம்
குறித்த போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் அணையா விளக்கு பகுதியில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி போராட்டத்தை ஆரம்பமானது.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்ககள், சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்
இப்போராட்டத்தில் அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டு அந்த அறிக்கை மனித. உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கபபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








