தியாக மரணத்தின் இறுதி நாள் 'நாளை' - அனைவரையும் அஞ்சலி செலுத்த அழைப்பு
நாளை இறுதி நாள் நினைவேந்தல்
தியாக தீபம் திலீபனின் (35ஆம் ஆண்டு நினைவு) இறுதி நாள் நினைவேந்தல் நாளை (26) காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளதாகவும், யாழ். நல்லூர் பகுதியிலுள்ள நினைவாலயத்துக்கு வருகைதந்து அனைவரையும் அஞ்சலி செலுத்துமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் சார்பில் தவத்திரு வேலன் சுவாமிகள் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
தியாக மரணத்துக்கு முதல் நாள்
இதேவேளை, திலீபனின் பன்னிரு நாள் தியாக அறவழித்தடத்தில் அவரது தியாக மரணத்துக்கு முதல் நாளான பதினோராம் நாள் இன்றாகும். இன்றைய நாளில் திலீபனின் உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சி அற்றுக்காணப்பட்டன.
மாலை 4 மணியளவில் திலீபனின் உடல்நிலை மோசமான கட்டத்துக்குச் சென்று ஆழ் மயக்கநிலைக்கு ஒத்த கட்டத்துக்கு வந்திருந்தது. இலட்சக்கணக்கான மக்கள் நல்லூர் ஆலய வளாகத்தை மையப்படுத்தி குவியத்தொடங்கியிருந்தனர்.
இன்றிரவில் திலீபனின் உடல்நிலை மிகவும் மோசமடைய ஆரம்பித்தது. தியாக மரணத்துக்கு முதல் நாளிலும் தொடர்ந்த அந்த உறுதிமிக்க தியாகத் தருணம், இன்றைய நாளில் நல்லூரில் உள்ள அவரது நினைவாலயத்தில் நினைவூட்டப்பட்டது.
திலீபன் உண்ணா நோன்பிருந்து உயிரைத் தியாகம் செய்ததைக் குறிக்கும் வகையில் இன்று அடையாள உணவுத் தவிர்ப்பும் மேற்கொள்ளப்பட்டது.
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகத்தின் பல பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
'திலீபன் வழியில் வருகிறோம்' - ஊர்தி பவனி
அத்தோடு, திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது யாழ் மாவட்டத்துக்குள் நகர்ந்து வருகிறது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் ஆரம்பித்த ஊர்தி பவனி, தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கியவாறு யாழ் மாவட்டத்துக்குள் நகர்ந்து வருகிறது.
இந்த ஊர்திப் பவனியானது யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்துள்ளதுடன் நாளை 26 ஆம் திகதி நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவாலயத்தை வந்தடையும்.
யாழ்ப்பாணப் பல்கலையின் ஊர்தி பவனி
இதேவேளை, திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து இன்று ஊர்தி பவனியொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
