வன்னியில் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபத்தின் இறுதி நாள் நினைவேந்தல்
தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிரை அர்ப்பணித்த தியாக தீபம் திலீபனுக்கு வன்னியின் பல்வேறு பகுதிகளிலும் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் திலீபனின் 38ஆம் ஆண்டு இறுதி நாள் நினைவுதினம் நினைவுகூரப்பட்டது.
அவசர கால சட்டத்தை நீக்குதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோருதல், வீதியோர இராணுவ முகாம்களை அகற்றல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஈழ மக்களுக்காக நல்லூரின் வீதியில் பன்னிரெண்டு நாட்கள் உண்ணா விரதம் இருந்து 1987 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 26 அன்று திலீபன் உயிர் துறந்தார்.
முல்லைத்தீவில் நினைவேந்தல்
இந்த நிலையில் தமிழர் தயாகமெங்கும் தமிழர் வாழும் தேசமெங்கும் இன்று தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெறுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்ப்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
அதேவேளை வற்றாப்பளையில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞானதாஸ் யூட் பிரசாத் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
அதேபோன்று முள்ளியவளை பிரதேசத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சின்னராசா யோகேஸ்வரன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
வவுனியாவில் நினைவேந்தல்
வுவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் தியாகி திலீபனின் 38வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வானது வவுனியாவில் உள்ள பொங்கு தமிழ் தூபியடியில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது.
தமிழரசுக்கட்சியினால் நினைவேந்தல்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்று (26) காலை 10.30 மணியளவில் மன்னார் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் இடம்பெற்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை பிரதிநிதிகள், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மன்னாரில் நினைவேந்தல்
அத்துடன் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்று (26) காலை மன்னாரில் நினைவு கூரப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னாரில் இடம்பெற்ற போது அன்னாரின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மாலை அணிவிக்கப் பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்ட தனைத் தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

