அம்பிட்டிய தேரரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து சுமந்திரன் காவல்துறை மா அதிபருக்கு கடிதம்
தமிழ் சமூகத்திற்கு எதிராக, தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் மீது சிறிலங்கா காவல்துறை இன்னமும் நடவடிக்கை எடுக்காமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன்படி, காவல்துறை மா அதிபருக்கு கடிதமொன்றினையும் அவர் அனுப்பிவைத்துள்ளார்,
வெளிப்படையாக மிரட்டியுள்ளார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியனை சுமன தேரர் தொடர்ச்சியாக கருத்துக்களால் தாக்கியது மாத்திரமல்லாமல், தென்னிலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களையும் துண்டு துண்டாக வெட்டுவேன் என்று வெளிப்படையாக மிரட்டியுள்ளார் என தனது கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டியிருந்தார்.
இவரது கருத்துக்கள் நாட்டில் வன்முறை மற்றும் இன, மத வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன, இப்படியாக ஒரு இனத்தை அச்சுறுத்தும் வகையில் பகிரங்கமாக கருத்துரைக்கும் தேரர் மீது ஏன் இதுவரை எந்த சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், தேரரின் கருத்துக்கள் அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டப் பிரிவு 3 இன் படி தெளிவான விதி மீறல் இது என்றும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.