கஜேந்திரகுமாருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை கண்டிக்கும் தமிழர் தரப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்னால் நேற்று(26) பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தலைமையிலும் நேற்று முன்தினம்(25) பத்ரமுல்ல சீலரத்ன தேரர் தலைமையிலும் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

இனவாதத்தை வேண்டுமென்றே தூண்டுகிற முயற்சிகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது டுவிட்டர் சமுக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.
We condemn unreservedly the protest staged outside @GGPonnambalam ‘s residence. The blatant effort to instigate racial hatred must be nipped in the bud. https://t.co/5H6uhvf91Q
— TNAMedia (@TNAmediaoffice) August 27, 2023
புளொட் கட்சி
இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்னால் சிங்கள பௌத்த பேரினவாதிகளினால் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதன் ஊடாக இனக் கலவரங்களை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்னால் நேற்றும், நேற்று முன்தினமும் பௌத்த பேரினவாதிகளினால் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமையினால் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே இவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இலங்கையை மீண்டும் அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் என அவர் யாழ்ப்பாணத்தில் இன்று(27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.