நாளை வெளிவரவுள்ள கூட்டமைப்பின் முக்கிய அறிவிப்பு
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது ஆதரவாக வாக்களிப்பா? அல்லது எதிர்த்து வாக்களிப்பதா? என்பது குறித்த இறுதி முடிவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாளை எடுக்கவுள்ளது.
இதற்காக நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நாளைய தினம் புதன்கிழமை காலை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்க்கட்சியினரால் இன்றைய தினம் நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையை இன்றைய தினமே சபையில் சமர்பித்து, விவாதத்திற்கு அனுமதி வழங்கி இன்று மாலை வாக்கெடுப்பை நடத்தும்படி பிரேரணையை கையளித்த எதிர்கட்சிப் பிரதம கொறடாவாகிய நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
எனினும் அந்தக் கோரிக்கையை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நிராகரித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளைய தினம் பெரும்பாலும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்றும், பெரும்பாலும் வாக்கெடுப்பிற்கும் விடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது ஆதரவாக வாக்களிப்பதா? அல்லது எதிர்த்து வாக்களிப்பதா? என்ற முடிவினை இதுவரை எடுக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு இன்று தெரிவித்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனுடன் தொலைபேசியில் இதுபற்றி வினவியபோதே அவர் இந்தப் பதிலை வழங்கினார்.