சாலை முகாமையாளர் மீது நடத்துனர் தாக்குதல் : வவுனியாவில் சம்பவம்
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை முகாமையாளர் மீது பேருந்து நடத்துனர் ஒருவர் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது நேற்று(11) மாலை இடம்பெற்றுள்ளது.
அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி புறப்பட்ட அரச பேருந்தில் பயணித்த பயணி ஒருவர், பேருந்தின் நடத்துனர் பணத்தை பெற்றுக்கொண்டு பயணச்சீட்டு வழங்கவில்லை என வவுனியாசாலைக்கு தொலைபேசி மூலம் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளார்.
இதனையடுத்து இ.போ.சபையின் வவுனியாசாலை முகாமையாளர் உடனடியாக பரிசோதனை குழுவினரையும் அழைத்துக்கொண்டு மதவாச்சி பகுதியில் வந்துகொண்டிருந்த அந்த பேருந்தை மறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
பயண சீட்டு வழங்கவில்லை
இதன்போது குறித்த பேருந்தில் பயணித்த 20 பயணிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு பயணச் சீட்டு வழங்காமல் இருந்தமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து ஏற்பட்ட முரண்பாட்டால் சாலை முகாமையாளரை நடத்துனர் தாக்கியதுடன், பேருந்திலிருந்து இறங்கிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் பேருந்தில் பயணித்த பயணிகளை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்ட சாலை முகாமையாளர், பேருந்தின் சாரதியையும் அழைத்துக்கொண்டு மதவாச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.