மன்னாரில் பழமையான தேவாலயத்தில் புதையல் அகழ்வு : காவல்துறையினர் பாராமுகம்
மன்னார், சவுத்பார் பகுதியில் நீண்டகாலமாகப் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள மிகவும் பழமையான கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் மர்ம நபர்கள் சிலர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தேவாலயமானது பல வருடங்களாக எவ்வித முழுமையான கட்டுமானங்களும் இன்றி, முற்றிலும் சேதமடைந்து காணப்படும் நிலையில் இந்தப் பகுதியில் நேற்று முன்தினம் குறித்த சட்டவிரோத அகழ்வுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்படும் குறித்த சம்பவ இடத்தில், மர்ம நபர்கள் விட்டுச் சென்ற சில தடயங்களும் பொதுமக்களால் அவதானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சந்தேகிக்கப்படும் பொருட்கள்
குறிப்பாக, அகழ்வு இடம்பெற்ற பகுதியில் திஷ்டி நூல்கள், கற்கள் மற்றும் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சில பொருட்களும் காணப்படுவதாக நேரில் பார்த்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் குறித்த தேவாலயத்தில் இடம்பெற்ற இந்தச் சட்டவிரோத புதையல் அகழ்வு முயற்சி தொடர்பில் அப்பகுதி மக்களால் காவல்துறையினருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், காவல்துறையினர் இதுவரை சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை எனவும் மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவதையும், சட்டவிரோத புதையல் அகழ்வுகளையும் தடுக்க உரிய அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு தகுந்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |