கனடா போலவே மர்மமான படுகொலைகள்: இந்தியா மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய எல்லை நாடு
பாகிஸ்தான் மண்ணில் இந்திய முகவர்கள் இரண்டு படுகொலைகளை நடத்தியதற்கு நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாக ஆசிய நாடொன்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவில் சீக்கிய ஆர்வலர் கொல்லப்பட்டதை ஒப்பிட்டு பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலர் முஹம்மது சைரஸ் சஜ்ஜாத் காசி நேற்றைய தினம்(25) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது, “பாகிஸ்தானுக்குள் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளை முன்னெடுப்பது என்ற புதிய மற்றும் மோசமான நடவடிக்கையை இந்தியா நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் மண்ணில் படுகொலை
வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய உளவுத்துறையினர் பாகிஸ்தான் மண்ணில் படுகொலையை முன்னெடுக்கின்றனர்.
அவர்களே ஆட்களை தெரிவு செய்து, பணமளித்து, குற்றவாளிகள், பயங்கரவாதிகள் மற்றும் சந்தேகத்தை ஏற்படுத்தாத அப்பாவி மக்கள் உள்ளிட்டவர்களை களமிறக்கி தங்கள் திட்டத்தை நிறைவேற்றுகின்றனர்.” என குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டானது, சமீபத்திய ஆண்டுகளில் வெளிநாட்டு மண்ணில் இந்தியா சட்டத்திற்கு உட்படாமல் படுகொலைகளை முன்னெடுத்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
மேலும், இந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை கனேடிய நாடாளுமன்ற அவையில் இந்தியா மீது சுமத்தியிருந்தார்.
ஆனால், அதனை ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை தொடர்பில் தங்களை குற்றஞ்சாட்டுவது அபத்தவாதம் என இந்தியா நிராகரித்திருந்தது.
அமெரிக்காவும் இதுபோன்ற குற்றச்சாட்டை இந்தியா மீது முன்வைத்துடன் உரிய நேரத்தில் அப்படியாக ஒரு படுகொலை சதியை முறியடித்துள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் குற்றச்சாட்டு
ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை விசாரிப்பதாக இந்தியா பதிலளித்திருந்ததுடன் அமெரிக்க இந்தியரான குர்பத்வந்த் சிங்( Gurpatwant Singh Pannun) மற்றும் கனேடிய இந்தியரான ஹதிப் சிங் நிஜ்ஜார்(Hardeep Singh Nijjar )ஆகியோரை தடை செய்யப்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்றும் தேடப்படும் தீவிரவாதிகள் என்றும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் தான், கனேடிய மண்ணில் நடந்த படுகொலைக்கும் பாகிஸ்தானில் நடந்த படுகொலைக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக சஜ்ஜாத் காசி குறிப்பிட்டுள்ளதுடன் அரசாங்கத்திடம் உறுதியான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இருவரும் மசூதி வளாகத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளனர்.விசாரணையில், மூன்றாவது ஒரு நாட்டில் இருந்து இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் செயல்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து தற்போது விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் சஜ்ஜாத் காசி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |