வெளிநாடொன்றில் சடலங்களாக மீட்கப்பட்ட இலங்கையர்கள்..! மரணத்தில் கிளம்பும் சந்தேகம்
தென் கொரியாவில் (South Korea) இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங் கவுண்டியில் இடம்பெற்றுள்ளது.
20 மற்றும் 30 வயதுடைய இலங்கையர்களும் 50 வயதான கொரிய மேற்பார்வையாளர் ஒருவர் என மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தொட்டியில் இருந்து சடலங்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மீன் பண்ணை ஒன்றின் நீர் தொட்டிக்குள் இருந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு கியோங்சாங் காவல்துறை நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணியளவில் இளம் மீன் இனப்பெருக்க பிரிவுகளுக்கு தண்ணீர் வழங்கப் பயன்படுத்தப்படும் பெரிய நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியது.
நான்கு மீட்டர் அகலம், மூன்று மீட்டர் நீளம் மற்றும் இரண்டு மீட்டர் ஆழம் கொண்ட தொட்டி தண்ணீரில் நிரப்பப்பட்டிருந்தது. குறுகிய திறப்பு மற்றும் ஏணி வழியாக மட்டுமே இந்த நீர் தொட்டியை அணுகக்கூடியதாக இருந்தது.
மேற்பார்வையாளரின் குடும்பத்தினர் இரவு 7:38 மணிக்கு அவர் காணாமல் போனதாக முறைப்பாடு செய்ததை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் விசாரணை
இதனையடுத்து அதிகாரிகள் அந்த இடத்தில் ஆய்வு செய்தனர். இலங்கைத் தொழிலாளர்களில் ஒருவர் பணி சீருடையில் இருந்ததாகவும், மற்ற இருவரும் வழக்கமான உடையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனை திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |