மன்னார் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அநுரவின் அதிரடி அறிவிப்பு!
மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட இரண்டு காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 36 காற்றாலைகளுக்கு மேலதிகமாக, ஆரம்பிக்கப்பட்ட இரண்டு திட்டங்களுக்கான 14 காற்றாலை அமைக்கும் பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கியுள்ள கடிதத்தில் இதனை கூறியள்ளார்.
இது தொடர்பில் குறித்த திட்டத்துக்கு பல்வேறு எதிர்ப்புக்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்த அருட்தந்தை மார்க்கஸ் “IBC தமிழ் செய்தி”சேவைக்கு குறித்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடர் போராட்டங்கள்
மன்னாரில் குறித்த காற்றாலை நிறுவல் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையில் கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைக்க நிபுணர்கள் குழுவொன்றை ஜனாதிபதி அமைத்திருந்தார்.
குறித்த குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜனாதிபதியின் பணிப்புரை வெளியாகியுள்ளது.
கோரிக்கைகள்
மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையிலான காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்து”, “எங்கள் மண்ணை சுடுகாடாக்காதே”, “அடிக்காதே, அடிக்காதே எங்கள் வயிற்றில் அடிக்காதே” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் கடந்த காலங்களில் கவனயீர்ப்புப் பேரணியில் பங்கேற்றனர்.
மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வினை அழித்துக்கொண்டிருக்கும் திட்டங்கள் , மனித உரிமை மீறல்கள் என சில விடயங்கள் கடந்த காலங்களில் விசனத்துக்குள்ளாகியிருந்தன.
1. மன்னார் தீவில் மேற்கொள்ளப்படும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் (பல நிறுவனங்கள், இலங்கை மின்சார சபையின் அனுமதியுடன் ஆதரவுடன் செய்து வருகிறது. உதாரணம் தாழ்வுபாடு, கீரி, தரவன் கோட்டை, சாந்திபுரம், சவுத்பார், சிலாவத்துறை, காயாக் குழி போன்ற சில இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
2. வெளிநாட்டு தனியார் கொம்பனிகளினால் எமது இலங்கை நாட்டையும், மன்னாரையும் முற்றாக அழித்து எங்கள் வளங்கள் முழுவதையும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல மன்னார் தீவிலும், மன்னார் பெரும் நிலப்பரப்பிலும் மேற்கொள்ளப்படும், மேற்கொள்ளப்படவுள்ள பாரிய வளங்களை அழிக்கும், மனிதன் வாழும் உரிமைகளை அழிக்கும் பல கனிய மணல் அகழ்வு திட்டங்கள்.
இரண்டு நிறுவனங்களால் கனிய மண் அகழ்வுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான திரைமறைவில் பல முயற்சிகள் செய்யப்படுகிறது.
3. பல ஆண்டுகளாக அழிக்கப்பட்டு வரும் கடல் வளங்கள், அத்துமீறிய இந்திய மீனவர்கள் வருகை, சட்டங்களுக்கு எதிரான மீன்பிடி முறைகளை பயன்படுத்துதல், திட்டமிடாத அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுதல் போன்ற செயல்களால் கடல் வளங்கள் பாரிய அளவில் அழிக்கப்பட்டு வருகிறது.
4. மக்களின் வாழ்விடங்களும் காணிகளும் அபகரிக்கப்படுதல். மக்களின் தேவை கருதியும், அவர்களின் மனித உரிமைகள் மதிக்கப்படும் வகையில் காணிகள் இன்னும் பங்கிட்டு கொடுக்கப்படாமல் காலங்கள் பிற்போடப்பட்டு பல ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.
(இதுவரை 4000க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதற்கு காணிகள் கேட்டும், 800 க்கு மேற்பட்ட இளையோர் சுய தொழில்கள் தொடங்க காணிகள் கேட்டும், மன்னார் மாவட்ட செயலகத்தில் விண்ணப்பித்துள்ளார்கள்.)
நிபுணர் குழுவின் அறிக்கை
இவை போன்ற பல பாரிய சிக்கல்கள் மன்னார் மக்களுக்கு ஏற்படுத்தும், பல சட்டவிரோத அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் உடன் நிறுத்தி, மக்களுடன் நல்ல முறையில் கலந்துரையாடி, பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் திட்டங்களை கைவிட்டு, மக்களுக்கு நலன்கள் கொண்டு வரும், மக்களை பாதிக்காத திட்டங்கள் நல்ல முறையில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்று, கடந்த காலங்களில் மக்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கடந்த ஜனவரி 3, 2025 அன்று முடிவெடுக்கப்பட்டதோடு, குறித்த அறிவிப்பை ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க அப்போது விடுத்துதிருந்தார்.
மேலும், மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 13.09.2025 அன்று கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்திடமிருந்து கிடைக்கும் பதிலின் ஊடாக, அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் டி.எம்.உதயங்க ஹேமபால இதன்போத விளக்கியிருச்தார்.
திட்டத்திற்கான நடவடிக்கை
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கான நடவடிக்கை குறித்து, ஜனாதிபதியால் ஒரு மாதகால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 12.09.2025 அன்று அந்த கால அவகாசம் நிறைவடைந்தது.
எரிசக்தி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அந்தப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் தொகுப்பாகக் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அத்துடன், மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை தொடர்பான எரிசக்தி அமைச்சின் பரிந்துரைகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுகளுக்கு எதிராக மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 47 ஆவது நாட்களை கடந்து முன்னெடுக்கப்பட்ட பின்னணியில் கடந்த 20 செப்டம்பர் 2025 அன்று கொழும்பிலும் பாரிய ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் அரசாங்கத்தால் எவ்வித சாதக பதிலும் கிடைக்காத பின்னணிலில் தற்போதைய ஜனாதிபதியின் அறிவிப்பு முக்கியத்துவம் மிக்கதாக மாறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

