இனி விசா தேவையில்லை: ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய விசா நடைமுறை
வளைகுடா நாடுகளை சேர்ந்த குடியிருப்பாளர்கள் விசா இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கும் வகையில் புதிய விசா விதிகள் உருவாக்கப்படவுள்ளன.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுமார் 70% சுற்றுலா பயணிகள் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து வருவதால், சுற்றுலாத் துறையை ஆதரிக்கும் நோக்கத்துடன், பல்வேறு நாடுகளில் வசிப்பவர்கள் விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் புதிய விதிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
இதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் துக் அல் மர்ரியின் கூற்றுப்படி, புதிய விசா அமைப்பானது சவுதி அரேபியா உட்பட அண்டை வளைகுடா நாடுகளுக்கு அதன் குடியிருப்பாளர்களை (residents) எளிதாக பயணிக்க அனுமதி வழங்கப்படும் என கூறியுள்ளார்.
சுதந்திரமாக பயணிக்கலாம்
இது தொடர்பில் அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் கூறுகையில், “இந்த புதிய முறை விரைவில் நடைமுறைக்கு வரும் மற்றும் வளைகுடா நாடுகள் சவுதி அரேபியாவின் சுற்றுலா வளர்ச்சியால் பயனடையும், நாட்டிற்கு எது நல்லது என்பது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட பரந்த பிராந்தியத்திற்கு பயனளிக்கும்”என்றார்.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் (GCC) சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஓமன், குவைத் மற்றும் கத்தார் உள்ளிட்ட பல நாடுகள் உள்ளன.
இந்த நாடுகளின் குடிமக்கள் விசா பெறாமல் எல்லைகளைத் தாண்டி சுதந்திரமாக பயணிக்கலாம், ஆனால் குடியிருப்பாளர்களுக்கு GCC நாடுகளுக்கு இடையே பயணிக்க விசா தேவை என்பது குறிப்பிடத்தக்கது.