வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆவது எழுச்சி மாநாடு ஆரம்பம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “வட்டுக்கோட்டை – 50 எழுச்சி மாநாடு” யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது.
இந்த மாநாடு இன்று (20.06.2026) யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
தந்தை செல்வாவின் நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தி, பொதுச்சுடர் ஏற்றி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
1976ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்று இறைமையின் அடிப்படையில் அரசியல் அபிலாசையாக முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம், தமிழர் மக்களின் ஒருமித்த மற்றும் ஜனநாயக அரசியல் விருப்பத்தின் வெளிப்பாடாக அமைந்தது.
இதன்போது கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகள் மூலம், வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அரசியல், சட்ட மற்றும் தமிழ் இனத்தின் இறைமையின் பரிமாணங்களும் ஆராயப்படவுள்ளதுடன் தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலப் பாதைகள் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெறவுள்ளன.
தமிழ்மக்களின் அபிலாசையை வெளிப்படுத்த இந்நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |