வலி வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்: ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினரிடம் வாக்குமூலம் பதிவு
பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடம் பலாலி காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
வலி வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி, பலாலி மற்றும் மயிலிட்டி பகுதி மக்களால் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டங்களுக்கு ஈ.பி.டி.பி கட்சியினர் தொடர்ந்தும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
பொதுமக்களுக்கு இடையூறு
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (16-08-2026) பலாலியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அனுஷியா ஜெயகாந்த் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக பலாலி காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பலாலி காவல் நிலையத்திற்கு நேற்று (21-08-2026) அழைக்கபட்ட அனுஷியா ஜெயகாந்திடம் காவல்துறையினர் முறையான வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த விசாரணையின் போது, சட்டத்தரணி ஸ்ரனிஸ்லஸ் செலஸ்ரின் ஈ.பி.டி.பி கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் வலி வடக்கு நிர்வாக செயலாளர் இ. ஜெயபாலசிங்கம் (அன்பு) ஆகியோரும் அவருடன் சென்றிருந்தனர்.
இதேநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் காவல் நிலையத்திலிருந்து வெளியேறிய ஈ.பி.டி.பி உறுப்பினர்கள், உடனடியாகவே மயிலிட்டியில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்திலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

