அரசியல் கட்சி பேதங்களை கடந்து, நீருக்காக ஓரணியாய் திரள்வோம்!
நிலத்தடிநீருக்கும் விவசாயத்திற்கும் ஆப்புவைக்கும் செயற்பாட்டை ஏற்கமுடியாது என்று புதியஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சியின் வன்னிமாவட்ட செயலாளர் நி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியாக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாமையம் தொடர்பாக அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வவுனியாக்குளத்தில் மண்போட்டு நிரவப்பட்டு, பொழுதுபோக்குப் பூங்காவாக அமைப்பதற்கு இரண்டரை ஏக்கர் நிலத்தினை நீர்பாசனத் திணைக்களத்துடன் இணைந்து, வவுனியா நகரசபையின் அனுமதியுடன், பூங்கா அமைத்தது யாவரும் அறிந்ததே.
தற்போது மேலும் இரண்டு ஏக்கர், நிலம் அபகரிக்கப்பட்டு வேறு கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருவதுடன் அதனை அரச அதிகாரிகள், அரசியல்தலைமைகள் அனைவரும் கண்டும்காணாமல் இருந்துவருவதும், மௌனம் காப்பதும் கவலையளிக்கின்றது.
வவுனியா நகரின் மத்தியில் அபகரிக்கப்படும் இந்நிலத்தில் உல்லாசக் ஹோட்டல்கள் நிறுவப்படவுள்ளன.
அவ் உல்லாசக் ஹோட்டல்களை மையமாகவைத்துக்கொண்டு கேவலமான களியாட்டங்கள் சமூக விரோதசெயல்கள் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளன என்பதை அனைவரும் கருத்தில்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமன்றி நிலத்தடி நீருக்கும் விவசாயத்திற்கும் எதிர்கால சமூக இருப்பிற்கும் ஆப்புவைக்கும் இச் செயற்பாட்டை சாதாரண மக்களின் வாழ்வில் மண் அள்ளிபோடும் விடயமாகவே நாங்கள் பார்கின்றோம்.
மேலும் நாடு முழுவதும் பல்வேறு வகையில் இயற்கையில் கைவைக்கும் நிலை தற்போது அதிகரித்துச் செல்கின்றது.
அதிகாரத்தில் இருக்கக்கூடிய சக்திகளின் கைகளிற்கு தரகுப்பணமும், வேறு கவனிப்புகளும் இருப்பதனால் இதனை கண்டும் காணாதவர்கள் போல் இருந்து வருவது மனவேதனை அளிக்கிறது.
தொடர்ந்து இந்நிலமைகளை அனுமதிப்போமானால் எதிர்கால இளம் தலைமுறைக்கு சுத்தமான நீர் பயனுள்ள நிலம் சுத்தமான காற்று என்பவற்றை இல்லாமல் செய்து ஒரு இருண்ட பாலைவனச் சுற்றுச்சூழலை கையளிக்கவேண்டிவரும்.
எனவே வவுனியாக்குளத்திற்குள் மண் நிரவப்பட்டு பூங்கா அமைக்கப்பட்டதை, கண்டித்தும் மேலும் கட்டடங்கள் கட்டுவதற்கு குளத்தில் நிலங்கள் அபகரிக்கப்படுவதை கண்டித்தும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வவுனியா பண்டாரவன்னியன் சிலைமுன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை புதிய ஜனநாயக மாக்சிசலெனினிச கட்சி வரவேற்பதுடன், கட்சியானது முழு ஆதரவினையும் வழங்கும் என்பதை குறிப்பிடுகின்றோம்.
எனவே வவுனியாமாவட்ட மக்கள் நிலத்தடிநீர் நெற்செய்கை, என்பவற்றை பாதிக்கும் இச்செயற்பாட்டை, கண்டிப்பதற்கு இச்சத்தியாக்கிரக, பந்தலுக்கு பெருமளவில் வருகைதந்து ஆதரவுதருமாறும் பத்து வருடங்களிற்கு பின்பு வவுனியா மாவட்டம் எதிர்நோக்கப்போகும் நிலத்தடிநீர் பிரச்சனையின் போது வரலாற்றுத்தவறினை இழைத்துள்ளோம் என கவலைகொள்ளாமல், தடுப்பதற்கு, இச்சத்தியாக்கிரக போராட்டத்தை வலுப்படுத்துமாறும் அரசியல் கட்சி பேதங்களை கடந்து, நீரின் இருப்பை பாதுகாக்க ஓரணியாய் திரள்வோம், என்பதை இதயசுத்தியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றுஅந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.