எலும்புக் கூடுகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை தெரியவேண்டும்:காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
எமக்குத் தேவையானது எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையை அறிவிக்கும் அறிக்கை மட்டுமல்ல. அந்த எலும்புக்கூடுகளுக்குப் பின்னால் புதைக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் அடையாளங்களையும், அவர்களின் மரணத்திற்கான காரணங்களையும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் வெளிப்படுத்தும் நேர்மையான விசாரணையாகும் என வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று (17) செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் வாசிக்கப்பட்ட அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில், செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவா, அனுஷா வன்னிநாயக்கே ஆகியோரால் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஏற்க முடியாதது
இந்த அறிக்கையை இறுதியானதும் முழுமையானதுமான தடயவியல் முடிவாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம். செம்மணி என்பது வெறுமனே சில மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட ஓர் இடமல்ல.

அது ஈழத்தமிழர்களின் வரலாற்றில் நீண்டகாலமாகத் தொடரும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், படுகொலைகள், அரச வன்முறைகள், நீதிமறுப்பு ஆகியவற்றுடன் தொடர்புபட்ட மிக முக்கியமான நீதிக்கான களமாகும்.
தமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா, கொல்லப்பட்டார்களா, எங்கே புதைக்கப்பட்டார்கள் என்ற கேள்விகளுடன் பல தசாப்தங்களாகப் போராடிக்கொண்டிருக்கும் தாய்மார்களினதும் குடும்பங்களினதும் உணர்வுகளையும் நீதிக்கான எதிர்பார்ப்புகளையும் கருத்திற்கொள்ளாமல் இவ்வாறான ஒரு முக்கியமான விசாரணையை வெறுமனே தொல்லியல் அகழ்வாய்வு - எலும்புக்கூடுகளின் ஆரம்பநிலை அவதானிப்புகளுக்குள் மட்டுப்படுத்திவிட முடியாது.
அறிக்கையில் பல எலும்புக்கூடுகள் தொடர்பில் மரணத்திற்கு முன்பான அல்லது மரணத்தின் போது ஏற்பட்ட காயங்களுக்கான தெளிவான தடயங்கள் கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |