வெலிகம பிரதேச சபை தவிசாளர் சுட்டுக்கொலை : புதிய தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் புதிய தவிசாளரைத் தெரிவு செய்யும் நடவடிக்கை இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்க நேரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபையில் நிறைவெண் இல்லாத காரணத்தினால் இவ்வாறு புதிய தவிசாளரைத் தெரிவு செய்யும் நடவடிக்கை இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிகம பிரதேச சபையின் தவிசாளராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த லசந்த விக்கிரமசேகரவின் (Lasantha Wickramasekara) படுகொலை காரணமாக, அந்தப் பிரதேச சபையின் தவிசாளர் பதவி வெற்றிடமாகியிருந்தது.
தென் மாகாண சபை
புதிய தவிசாளர் ஒருவரைத் தெரிவு செய்வது கடந்த நவம்பர் 28 ஆம் திகதி தென் மாகாண சபையின் உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் நடைபெறவிருந்த போதிலும், நிறைவெண் இன்மையால் அந்த நடவடிக்கை இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, 45 உறுப்பினர்களைக் கொண்ட வெலிகம பிரதேச சபையின் தவிசாளரைத் தெரிவு செய்யும் நடவடிக்கை இன்று (26) காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இன்றைய தினம் 22 உறுப்பினர்கள் மட்டுமே சபைக்கு வருகை தந்திருந்ததன் காரணமாக, நிறைவெண் இன்மையால் தவிசாளரைத் தெரிவு செய்யும் நடவடிக்கையை மீண்டும் ஒத்திவைக்க உள்ளூராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |