இருதய நோய்! மணிக்கு மணி பலியாகும் நூற்றுக்கணக்கானோர் - எப்படி தடுப்பது..!
இன்று( 29) உலக இருதய தினமாகும். இருதயநோய்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் இதேநாளை உலக இருதய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். இன்றைய சூழலில் இருதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கிறது.
உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு நூற்றுக்கணக்கானோர் இருதய நோயால் உயிரிழப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.
இருதய நோய்
ஒருகாலத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது வயதுப் பாகுபாடு இன்றி 20 வயது இளைஞர்களையும் விட்டுவைக்கவில்லை இருதய நோய்.
பெரும்பாலும் 2 அல்லது 3 மில்லிமீட்டர் அளவில் இரத்தக் குழாயில் கொழுப்பு படிந்து அடைப்பு ஏற்படுவது, இரத்தம் உறைவது, இரத்தக் குழாய் சுருங்குவது உள்ளிட்ட காரணத்தால் இருதய நோய் ஏற்படுகிறது.
உடலின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமானது இரத்த ஓட்டம். இருதய நோய் என்றால் என்ன என்பது பற்றி எமக்கு துல்லியமாக தெரிந்திருக்காது. அதனை கார்டியோ வாஸ்குலர் டிஸீஸ் என்பார்கள்.
சுவாசத்திற்கும், இருதயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைப்பழக்கம், மன அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றாலும் இருதயத்துக்குப் பிரச்சினை ஏற்படுகிறது.
இருதய நோய்களைப் பொருத்தவரை ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளும் இருப்பதில்லை. நோய் அதிகமாகும்போது கால்களில் வலி, மரத்துப் போதல், கால் வீக்கம், கைகளில் வலி போன்றவை ஏற்படக்கூடும்.
இருதய நோயை எப்படி தடுப்பது
- ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு உண்ணுதல், குறிப்பாக பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும்
- தினமும், முறையாக உடற்பயிற்சி செய்வது இருதய நோயின் ஆபத்தை தவிர்க்கும், உடற்பயிற்சியோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான உடல் எடையை நிர்வகித்தல் போன்றவை நம் இருதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
- இருதய நோய் தாக்குவதற்கு மிக முக்கிய காரணி புகைபிடிப்பது மற்றும் புகையிலை மெல்லுவதாகும். இருதய நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள புகையிலையின் பக்கமே போகாமல் இருக்க வேண்டும்.
- மாமிச உணவுகள், பால் பொருட்கள், தேங்காய் மற்றும் பனை எண்ணெய்ப் பொருட்கள் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும்.
- வயது வந்த பெரியவர்களுக்கு பெரும்பாலும் உடல் எடை அதிகரிப்பது தசைநார்களைவிட கொழுப்பே ஆகும். இந்த அதிக கொழுப்பு எடை இருதய நோய், உயர் இரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு நம்மை இட்டுச் செல்லும். எனவே உடல் எடையை சரியாக பாதுகாக்க வேண்டும்.
- இருதய நோய் உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரை எடுத்து கொள்ளவேண்டும். மேலும் மருத்துவரின் பரிந்துரை படி மருந்துகளை எடுத்து கொள்ளவேண்டும்.
நிரந்தரத் தீர்வு
இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும் அனைவருக்கும் அறுவைச் சிகிச்சை கட்டாயம் அல்ல. ஆஞ்சியோ, ஸ்டென்ட் போன்ற சிகிச்சைகள் கூட தற்காலிக நிவாரணி தான்.
நேர்மறை எண்ணத்துடன் மனநிறைவுடன் இருக்கும் போதும், உணவு, உடற்பயிற்சியை முறையாக பின்பற்றும் போதும் எண்டோர்பின் என்ற ஆர்மோன் சுரக்கிறது. இதனால் இரத்தக் குழாயில் படிந்த கொழுப்பை கரைத்து, மேலும் கொழுப்பு படியாமல் தடுக்கிறது.
புகைபிடித்தல், மதுப்பழக்கம் உள்ளிட்டவைகளை தவிர்த்தால் இருதய நோய் உள்ளிட்ட எந்தப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை.
முறையான உணவு முறை, உடற்பயிற்சி, நேர்மறையான மகிழ்ச்சியான வாழ்க்கை முறை மட்டுமே இருதய நோய் பாதிக்காமலிருக்க நிரந்தரத் தீர்வு.