வெள்ளையடிக்கிறதா..! உலக தமிழர் பேரவை
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு கொடூரமான முறையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்களின் இருப்பானது கட்டமைக்கப்பட்ட வகையில் அழிக்கப்பட்டுவருகின்றது.
முல்லைத்தீவு, மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான கொக்குகிளாய், கொக்குத்தொடுவாய் என ஆரம்பித்து, முல்லைத்தீவின் குரூந்தூர்மலை, வவுனியாவின் வெடுக்குநாரி மலை என தொடரும் ஆக்கிரமிப்புகள், தற்போது கிளிநொச்சி, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் வரை வியாபித்துள்ளது.
அத்துடன் தமிழர் தாயகத் தலைநகரான திருகோணமலையில் தமிழர்களின் இருப்பு ஏற்கனவே கேள்விக்குறியாகியுள்ள நிலையில், முற்றுமுழுதாக தமிழர்கள் இருக்கும் இடமான பெரியகுளம் பகுதியில் விகாரை அமைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தமிழ் மக்களின் இருப்பை தக்கவைப்பதே கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உலக தமிழர் பேரவையினர், மக்களுக்கு இடையிலான தேசிய கலந்துரையாடல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.
இலங்கைக்கு கடந்த வியாழக்கிழமை 7 ஆம் திகதி இலங்கைக்கு சென்றுள்ள உலக தமிழர் பேரவையினர் கொழும்பை மையப்படுத்திய சிங்கள அரசின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை முதலில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
தொடர்ந்து சிங்கள மக்களின் உயர்மட்ட பௌத்த மகாசங்கத்தினரான அஸ்கிரி, மல்வத்து, அமரபுர மற்றும் ராமான்ஞா பீடங்களின் மகாநாயக்கர்களை சந்தித்து கலந்துரையாடிய உலக தமிழர் பேரவையினர், தமது ஆசி வழங்கிய மகாநாயக்க தேரர்களுக்கு நன்சான்று வழங்கி, புகழாரமும் சூட்டியிருந்தனர்.
தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயங்களுக்கு எதிரான கருத்துக்களை கடந்த காலங்களில் வெளிப்படையாக கூறி வந்த பௌத்த மத பீடங்கள், தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என்ற நன்சாற்றை உலக தமிழர் பேரவையினர் வழங்கியமை தமிழ் மக்கள் மத்தியில் மேலும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறு சிங்களத் தரப்புகளுடனான சந்திப்புக்களை தொடர்ந்து தமிழர் தாயகமான வட பகுதிக்கு சென்றிருந்த உலக தமிழர் பேரவையினர் நல்லை ஆதீனம், யாழ் மறை மாவட்ட ஆயர் ஜெஸ்ரின் ஞானப்பிரகாசம் உள்ளிட்டவர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
நல்லை ஆதீனத்துடனான சந்திப்பின் போது, உலக தமிழர் பேரவையினரான நீங்கள் யார் என்று தமக்கு தெரியாது என தெரிவித்த நல்லை ஆதீனத்தின் செயலாளரான கலாநிதி ஆறு திருமுருகன், ரணில் அரசு மீதான கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்திருந்தார்.
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் திருப்பணிவேலைகளை செய்ய முடியாத வகையில், தொல்பொருள் திணைக்களத்தினரால் பல இடர்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
முதலில் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு, தீர்வு காணும் போதே தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்று தருவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படும் எனவும் கலாநிதி ஆறு திருமுருகன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் பௌத்த பீடங்களுடன் கைகோர்த்து தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான தேசிய உரையாடல்களை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையில் சமானதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற உலக தமிழர் பேரவையினரின் கருத்தானது தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களின் அடிப்படை இருப்பை பாதுகாக்குமாறு வலியுறுத்துவதை விடுத்து குறிப்பாக ரணில் தலைமையிலான அரசை வெள்ளையடிக்கும் முயற்சியாக உலக தமிழர் பேரவையினர் செயற்படுகின்றார்கள் என தமிழ் தேசியத்திற்காக குரல்கொடுப்போர் கடுமையான கண்டங்களை வெளியிட்டுவருகின்றனர்.
ஏற்கனவே தமிழ் தேசிய கட்சிகள் ஆளுக்கு ஒருபுறம் பிரிந்து நிற்கும் நிலையில், தமிழ் மக்களை மேலும் பிளவுபடுத்தும் முயற்சியாக தமிழர் பேரவையினரின் இந்த செயற்பாடுகள் அமைந்துள்ளதா என்ற சந்தேகம் தமிழ் தேசிய பரப்பில் உள்ளவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து முழுமையான தெளிவுடன், அது குறித்து சிங்கள அரசுக்கும் அதனை வழிநடத்தும் பௌத்த மத பீடங்களுக்கு எடுத்துரைப்பதை விடுத்து தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக கருதி உலக தமிழர் பேரவையினரும் தமது செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
கடந்த காலங்களில் சந்தர்ப்பவாத அரசியல் செய்து, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதை தற்போது அதிகாரத்திலுள்ள ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சிங்கள அரச தலைவர்கள் மறுத்திருந்த நிலையில், அரசியல் தீர்வு, நிலைமாறு கால நீதி உள்ளிட்ட விடயங்களில் கட்டாயமாக ஒற்றைப்பட்டு குரல்கொடுக்க வேண்டிய நிலையில் தமிழ் சமூகம் காணப்படுகின்றது.
அதனைவிடுத்து உலக தமிழர் பேரவையினரின் தன்னிச்சையான செயற்பாடுகள், இலங்கையின் தமிழ் மக்கள், தாயகம், தேசியம் மற்றும் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் வாழ்வதை கேள்விக்குறியாக்குமாயின், அதற்கு எதிராக கூட்டாக குரல்கொடுக்க வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் காணப்படுகின்றமை நிதர்சனமாகும்.