யாழில் கைக்குழந்தையுடன் விரட்டப்பட்ட இளம் தாய்
யாழ் (Jaffna) வடமராட்சி - கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன் உற்பத்தியாளர் ஒருவரால் இளம் குடும்பம் ஒன்று காணியை விட்டு விரட்டப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கட்டைக்காடு பகுதியை சேர்ந்த ஜெ.ஜெறோயன் என்பவர் திருமணமாகி இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மூன்று மாத கை குழந்தையுடன் வசிப்பதற்கு காணியற்று தவித்து வந்துள்ளார்.
கட்டைக்காடு பகுதியில் அதிகளவான நிலப்பரப்புகள் வனஜீவராசிகள் திணைக்கள ஆளுகைக்குள் இருப்பதால் அதன் சில பகுதிகள் மக்களின் கோரிக்கைக்கு இணங்க விடுபட்டு வருவதால் குறித்த குடும்பஸ்தர் வனஜுவராசிகள் ஆளுகைக்குட்பட்ட பகுதி ஒன்றில் தற்காலிகமாக வீடு அமைத்து வசிக்க முற்பட்டுள்ளார்.
கருவாடு வியாபாரி
இதனை அவதானித்த அப்பகுதியை சேர்ந்த கருவாடு வியாபாரி ஒருவர் குறித்த பகுதிக்குள் தன்னை மீறி யாரும் குடியிருக்க முடியாதென்றும் பத்து வருடங்களுக்கு மேலாக இதே இடத்தில் மீன்களை வெட்டி தான் கருவாடு வியாபாரம் மேற்கொள்வதாக தெரிவித்தார்.
அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் நோக்குடன் காவல்நிலையத்தை நாடியுள்ளார்.
இந்தநிலையில், குடிமனைக்குள் மீன் வெட்டி கருவாட்டு வியாபாரம் மேற்கொள்வது தடை என்பதால் மீண்டும் காவல்துறையினர் நேற்றைய தினம் (25) இருவரையும் விசாரணைக்கு அழைத்து நீதிமன்றம் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பிரதேச ஊடகவியலாளர்களால் அப்பகுதி கிராம அபிவிருத்தி தலைவரிடம் வினவிய போது தமது பிரதேசத்தில் மக்கள் குடியிருப்பு மத்தியில் மீன்வெட்டி வியாபாரம் மேற்கொள்வது தடை என்றும் பல முறை சம்பந்தப்பட்டவருக்கு தெரியப்படுத்தியும் அதை நிறுத்தவில்லை என தெரிவித்தார்.
இது தொடர்பாக பருத்தித்துறை பிரதேச சபையிடம் வினவிய போது குறித்த கருவாட்டு வியாபாரி தனது தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதிப் பத்திரத்தை பெறவில்லை என தெரிவித்தனர்.
முரணாக குடியிருப்பு
பத்து வருடங்களுக்கு மேலாக சட்டத்துக்கு முரணாக குடியிருப்புக்களுக்கு மத்தியில் மீனை வெட்டி நோய் பரவ காரணமாக இருக்கும் சம்பந்தப்பட்ட நபர் தொடர்பில் அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த சுகாதார பரிசோதகர் அனுமதி பத்திரத்தை கேட்ட போது மீன் வெட்டி வியாபாரம் செய்வதற்கான அனுமதி பத்திரம் இல்லை என்று கூறியதால் தொடர்ந்து மீன்களை குடிமனைக்குள் வெட்டி வியாபாரம் மேற்கொள்ள சுகாதார காரணங்களை கூறி தடை விதித்தார்.
சம்பவம் தொடர்பாக மேலும் அறிவதற்காக கிராம சேவகரை தொடர்பு கொண்ட போது அப்பகுதி வனஜுவராசிகள் ஆளுகைக்குட்பட்டதால் தான் தலையிட முடியாதென கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கருவாட்டு வியாபாரிக்கு ஏற்கெனவே இரண்டு உறுதிக் காணிகள் இருப்பதால் அதை விடுத்து இன்னொரு காணிக்குள் அனுமதியற்று சுகாதார முறைகேடுடன் தொழில் புரிந்து கொண்டு தற்காலிகமாக வசிப்பதற்காக வீடு அமைத்த இளம் குடும்பத்தை விரட்டியுள்ளார்.
பத்து வருடங்கள் அனுமதியற்று சுகாதார சீர்கேட்டுடன் தொழில் புரிந்து வந்த சம்மந்தப்பட்ட நபருக்கு எதிராக கிராம அலுவலர்,பிரதேச சபை,பிரதேச சுகாதார அதிகாரி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மூன்று மாத குழந்தையுடன் நீதி கோரிய கணவனும், மனைவியும் தேசிய மக்கள் சக்தியின் மருதங்கேணி கிளையிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |