வெளிநாடான்றில் கோர விபத்து – இரு இலங்கை இளைஞர்கள் உயிரிழப்பு
தென் கொரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரிய ஊடகங்களின் தகவல்களின்படி, தென் கொரியாவின் கியோங்கி மாகாணத்திலுள்ள ஹ்வாசொங் நகரில் கடந்த 26ஆம் திகதி இரவு 9.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் 30 முதல் 39 வயதுக்கு இடைப்பட்ட இலங்கைப் பணியாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
இவர்கள் குறித்த பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்ததுடன், பணி நிறைவடைந்து தங்குமிடத்துக்கு நடந்துசென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

எதிர்த்திசையில் வந்த பொருட்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றில் ஏற்றப்பட்டிருந்த மரத்தினால் செய்யப்பட்ட வீட்டின் கூரையின் ஒரு பகுதி, வாகனத்துக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்துள்ளது.
இதனுடன் மோதுண்டதிலேயே இருவரும் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்து இடம்பெற்றபோது சாரதி மதுபானம் அல்லது போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பாரவூர்தியில் பொருட்களை ஏற்றும்போது உரிய பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என்பது தொடர்பிலும் தென் கொரிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |