உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைத்த முன்னாள் அமைச்சர்கள்
அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு அமைய நான்கு முன்னாள் அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் முன்னாள் அமைச்சர்களான காமினி லொக்குகே(gamini lokuge), திலும் அமுனுகம(Dilum Amunugama), ரமேஷ் பத்திரன (ramesh pathirana)மற்றும் அஜித் ராஜபக்ச(Ajith Rajapaksha) ஆகியோர் தமது இல்லங்களை ஒப்படைத்துள்ளனர்.
ஒரு வாரத்திற்கு முன்னரே கையளிப்பு
தனது உத்தியோகபூர்வ இல்லத்தை ஒரு வாரத்திற்கு முன்னரே கையளித்ததாக முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். வீடு தொடர்பான கட்டணங்கள் செலுத்தப்பட்டதாகவும், ஆனால் அவர் வீட்டை ஒப்படைத்ததற்கான ஆவணத்தை பொது நிர்வாக அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து கட்டணங்களும் செலுத்தப்பட்டது
தற்போது உத்தியோகபூர்வ இல்லத்தை தாம் ஒப்படைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ இல்லத்தை தாம் கையகப்படுத்தியதில் இருந்து அது கையளிக்கப்படும் வரை அதற்கான கட்டணத்தை செலுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் முதலாம் திகதி உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான வாடகை, தண்ணீர் கட்டணம், மற்றும் மின்கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வீட்டு சாவியை கையளித்ததாக முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |