நாட்டில் புதிய கல்வி முறைக்கான பணிகள் ஆரம்பம் - ரணில் தெரிவிப்பு (படங்கள்)
21ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று (05) அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இன்னும் இரண்டு வாரங்களில் நிறுவப்படவுள்ள அரசியல் கட்சிகளின் மறுசீரமைப்பு தொடர்பான புதிய ஆணைக்குழுவில், மாணவர் நாடாளுமன்றங்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் வழங்க முடியும்.
கல்வித்துறை சீர்த்திருத்தங்கள்
எதிர்காலத்தில் குறைந்தபட்சம் 10 பல்கலைக்கழகங்களையாவது நாட்டில் உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும், மாணவர் கடன் திட்டங்களின் ஊடாக இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர்கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருக்கிறோம்.

மாணவர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு தேவையான பாடங்களை தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பம் அந்த பல்கலைக்கழகங்களின் ஊடாக வழங்கப்படும், புதிய தொழில்நுட்ப கல்லூரிகளை நிறுவுதல் உட்பட கல்வித்துறையின் பல்வேறு சீர்த்திருத்தங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது”என்றார்
மேலும், பல்கலைக்கழக மாணவர் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மாணவர்களிடத்தில் கருத்துகளை கேட்டறிந்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, அதற்கான சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கானவர்களைத் தெரிவுசெய்த பின்னர், அதன் முதல் கூட்டத்தை தற்போதைய அதிபர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
அதிபருக்கு நன்றி
இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதிநிதிகளான மாணவர் குழுவொன்றும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதோடு, தமக்கு கிடைக்காமல் போன வாய்ப்பை, தமது சகோதர மாணவர் குழுவுக்குப் பெற்றுத் தந்தமைக்காக அதிபருக்கு நன்றி தெரிவித்தனர்.
அதேவேளை இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சிலரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.




