தமிழர்கள் பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை அடையாளம் காணவில்லை: சாள்ஸ் நிர்மலநாதன் பகிரங்கம்
தமிழர்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை, எனவே தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ் மக்கள் ஆர்வமற்றவர்களாகவே இருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (15) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ''எதிர்வரும் அதிபர் தேர்தலின் போது தமிழரசுக் கட்சி யாரை ஆதரிப்பது அல்லது தமிழ் பொது வேட்பாளர் குறித்து இதுவரை எவ்வித கலந்தாலோசனைகளையும் முன்னெடுக்கவில்லை.
தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படல்
தமிழ் பொது வேட்பாளர் குறித்து ஊடகங்களில் கருத்தக்கள் வெளிவருகிறது. என்னை பொறுத்தமட்டில் அவர்கள் கூறுவதன் பிரதான காரணம் தொடர்ச்சியாக அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்களித்தாலும் தமிழர்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என சில கருத்துக்கள் நிலவுகின்றன. எனது தனிப்பட்ட கருத்தாக தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான விடயம்.
வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பை பொறுத்த வகையில் அங்குள்ள தமிழர்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை. காணவும் முடியாது என்பது என்னுடைய கருத்து.
அதிபர் தேர்தல்
எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கட்சித் தலைவர் அல்லது பொதுவானவர்களையோ அடையாளம் காண்பது என்பது கடினமான விடயம்.
குறிப்பாக தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்திற்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இருப்பதாக நான் காணவில்லை. தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ் மக்கள் ஆர்வமற்றவர்களாகவே இருக்கின்றனர்.
அதிபர் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் போது வேட்பாளர்கள் தேர்தலில் நிறுத்தப்படும் போது அந்த நேரத்தில் கட்சி ஒரு தெளிவான முடிவை எடுக்கும்'' என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |