யாழில் சுற்றுலாவிகளுக்கு இடையூறாக யாசகம் செய்தோருக்கு எதிராக நடவடிக்கை
யாழ். நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் இன்று யாழ். காவல்துறையின் பங்களிப்புடன் வெளியேற்றபட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், “சுற்றுச் சூழலை சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ் நகரப்பகுதி அதாவது யாழ் கோட்டைச் சுற்றுவட்டம், பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, போதனா வைத்தியசாலை சூழல் ஆகிய பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலாவிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு நாளாந்தம் பல்வேறு வகையிலும் யாசகம் என்ற போர்வையில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் நபர்களை கட்டுப்படுத்துமாறு எம்மிடம் கோரிக்கை பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வந்தது.
30 யாசகர்கள்
இந்நிலையில் இன்று குறித்த நடவடிக்கையை யாழ். காவல் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் கவனத்துக்கு எம்மால் கொண்டுசெல்லப்பட்டது.

அத்துடன் யாழ் மா நகரின் ஒத்துழைப்பையும் நாம் கோரியிருந்தோம். இந்த நடவடிக்கையின் போது வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 30 யாசகர்கள் மற்றும் வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்துவந்தோர் கைதுசெய்யப்படு, தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டபின் அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |