நீதித்துறையில் அநுர அரசின் தலையீடு : சபையில் தயாசிறி குற்றச்சாட்டு
கடந்த காலங்களை விட, இந்த அரசாங்கம் நீதித்துறையில் அதிக தலையீடுகளை மேற்கொள்வதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) குற்றம் சாட்டியுள்ளார்.
இதன்படி, தமக்கு ஏற்றவாறு நீதிபதி ஆயங்களை நியமித்து வழக்குகளை விசாரிக்கும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”அரசியலமைப்புக்கமைய, நீதிபதி அல்லது நீதியரசர் ஒருவரை வேறெந்த வேதனம் பெறும் பணிகளுக்கு அமர்த்த முடியாது. நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பதற்கு இத்தகைய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தகவலறியும் உரிமைச் சட்டம்
எனினும், ஓய்வுபெற்ற நீதியரசர் அல்லது நீதிபதியொருவரை அரச பதவிகளுக்கு நியமிக்கும்போது, நீதித்துறை சேவையின் சுயாதீனத் தன்மை குறித்து கேள்விகள் எழுகின்றன.
முன்னாள் பிரதம நீதியரசர் ஒருவர் தற்போது, ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர விதிவிடப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், அவரது நியமன கடிதம் குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கேள்வி எழுப்பியபோது, அவ்வாறான எந்த கடிதமும் இல்லை என பதிலளிக்கப்பட்டது.
முன்னதாக சுயாதீனமாக இருந்த நீதிச் சேவை அதிகாரிகள் சங்கம், காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னர் இந்த அரசாங்கத்தின் அரசியல் கட்சியுடன் இணைந்தது. தற்போது, இந்த சங்கத்தின் முன்னாள் தலைவர் வடமத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, பல நீதிபதிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்படுகின்றனர். அவ்வாறே மிகவும் சிரேஷ்ட நீதிவானாக இருந்த சதுரிக்கா டி சில்வா கல்கிசை நீதிவானாக நியமிக்கப்பட்டு ஓராண்டு கூட பூர்த்தியாகாத நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டார்.
கைது செய்யுமாறு உத்தரவு
அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்டோரை கைது செய்யுமாறு உத்தரவிட்ட பின்னணயில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். ராஜித சேனாரத்ன முன்பிணை கோரிய மனு நிராகரிக்கப்பட்டது, நீதவான் இருக்கும்போதே, மேலதிக நீதிவானிடம் சென்று கையூட்டல் ஆணைக்குழு பிடியாணை பெற்று, விடுமுறை நாளில் அவரை கைதுசெய்தது.
அரசாங்கத்துடன் தொடர்புடைய நீதிச் சேவை அதிகாரிகளின் குழுக்களே திட்டமிட்டு இத்தகைய செயற்பாடுகளை புரிகின்றன.
இதன்காரணமாக, வெளியக நீதியை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பிரதம நீதியரசர் இந்த விடயத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
