அசாத் மௌலானா மீது இலங்கையில் திடீர் வழக்குத் தாக்கல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புதிய தகவல்களை சனல் 4 ஆவணப் பதிவு ஊடாக வெளிப்படுத்திய கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் முன்னாள் ஊடக செயலாளர் அசாத் மௌலானா, மோசடியான முறையில் தம்மை ஏமாற்றி திருமணம் செய்ததாக பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மோசடியான முறையில் திருமணம்
சனல் 4 ஆவணப் பதிவின் ஊடாக பேசுபொருளாகியுள்ள அசாத் மௌலானா, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தம்மை திருமணம் செய்து ஏமாற்றியதாக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் சாய்ந்தமருது காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது சகோதரர் சகிதம் சென்ற இந்தப் பெண் வழங்கிய முறைப்பாட்டில், அசாத் மௌலானா போலியான ஆவணங்களை சமர்ப்பித்து முதல் திருமணத்தை மறைத்து தம்மை மறுமணம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மறுமணம் செய்த பின்னர் மட்டக்களப்பிலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்று பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி அங்கு சில நாட்கள் தங்க வைத்து குடும்பம் நடத்தினார் எனவும் அதன் பின்னர் தம்மை ஏமாற்றிவிட்டு தலைமைறைவாகி விட்டதாகவும் அந்தப் பெண் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பெண்ணின் முறைப்பாட்டிலுள்ள உண்மைத்தன்மையை கண்டறிந்து அறிக்கையிடுமாறு சாய்ந்தமருது காவல்துறையினருக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இந்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் கட்டளையாக்கியுள்ளார்.
பாரிய சந்தேகங்கள்
எனினும் சனல் 4 ஆவணப் பதிவு ஊடாக இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் பேசுபொருளாகியுள்ள அசாத் மௌலானாவினால் இரண்டு வருடங்களுக்கு முன் தாம் ஏமாற்றப்பட்டதாக குறித்த பெண் தற்போது முறைப்பாடு செய்துள்ளமை தொடர்பாக பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சனல் 4 ஆவணப் பதிவின் ஊடாக வழங்கிய வாக்குமூலத்தில், கோட்டாபய ராஜபக்சவை அதிகாரத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கையின் ஒர் அங்கமாக நாட்டில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கும் நோக்குடன், நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் ராஜபக்சவினரின் விசுவாசியான இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சலேயும் தொடர்புபட்டுள்ளதாக அசாத் மௌலானா குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.