செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் யாழ். பல்கலையில்.!
யாழ்ப்பாணம் (Jaffna) - செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று (03) வரை 40 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
40 என்புத் தொகுதிகளில் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்ட 34 மனித என்புத் தொகுதிகள் யாழ். பல்கலைக்கழகத்தில் (University of Jaffna) பாதுகாப்பாகப் பேணப்பட்டு வருகின்றதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
செம்மணிப் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
என்புத் தொகுதிகள் அடையாளம்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் மூன்று நாட்கள் இடம்பெற்ற வேளையில் மழை காரணமாக நிறுத்தப்பட்டு பின் ஆறு நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றிருந்தன.
அதன் பின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக 8 நாட்களாக இடம்பெற்று வருகின்றன. மொத்தமாக நேற்று (03) வரை 17 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 40 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சான்றுப் பொருட்கள்
அவற்றில் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்ட 34 மனித என்புத் தொகுதிகள் நீதிமன்றக் கட்டுக்காவலில் எடுக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி பிரணவனிடம் கையளிக்கப்பட்டன.
புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட பாடசாலைப் புத்தகப் பை, பொம்மை, காலணி, சிறு வளையல் போன்ற பொருட்கள் நீதிமன்றக் கட்டுக்காவலில் சான்றுப் பொருட்களாகப் பாதுகாப்பாகப் பேணப்பட்டு வருகின்றன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
