கட்டுநாயக்காவில் இரண்டு வெளிநாட்டு பயணிகள் கைது!
சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை, இன்று காலை (24.04.2026) கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, நாற்பத்திரண்டு இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பொதி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், 35 மற்றும் 53 வயதுடைய இரண்டு பங்களாதேஷ் புலம்பெயர் தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சீன நாட்டவர் ஒருவர் குறித்த சிகரெட் பொதிகளை சீனாவிலிருந்து வாங்கி, கம்போடியா வழியாக மலேசியாவின் கோலாலம்பூருக்குக் கொண்டு சென்று அங்கிருந்து, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்வதற்காக, குறித்த சிகரெட் பொதி கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் நாட்டினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஆரம்பகட்ட சுங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின், வழியாக சிகரெட் பொதியை எடுத்துச் சென்றபோது சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28,400 சிகரெட்டுகள்
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், வைத்திருந்த 5 பயணப் பைகளில் இருந்து, சீனாவில் தயாரிக்கப்பட்ட 28,400 சிகரெட்டுகள் அடங்கிய 412 அட்டைப் பெட்டிகளை பறிமுதல் செய்துள்ளதாக சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |