யாழ். அரசடி மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!
பிள்ளைகளை சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுமாறு வற்புறுத்தி பல்வேறு இடையூறுகளை மேற்கொள்ளும் நபரிடமிருந்து, தமது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்து தருமாறு கோரி யாழ்ப்பாணம் அரசடி வாழ் மக்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதன்படி, பிரதேசவாழ் மக்களது இயல்பு வாழ்வைய உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு தருமாறும் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டை நேற்று (09.10.2025) முற்பகல் மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசடி வாழ் மக்கள் இவ்விடயத்தை தெரிவித்தனர்.
குற்றச் செயல்கள்
மேலும் கருத்து தெரிவித்த அரசடி பிரதேச மக்கள் “குறித்த நபர் நீண்டகாலமாக பல்வேறு சமூகவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைக்கும் சென்றுவரும் ஒருவர்.
எமது அரசடி பகுதியில் வாள்வெட்டு சம்பவங்கள் இவரது பின்னணியில்தான் நடைபெற்று வருகின்றன.
இவை தொடர்பில் காவல்துறைக்கு முறைப்பாடு செய்தும் நடவடிக்கை மேற்கொள்வதில்லை. இதனால் நாம் நாளாந்தம் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகி வருகின்றோம்.
இந்நிலையில், அண்மையில் அரசடியில் குறித்த சட்டவிரோத நபரால் வெளியூரில் இருந்து சிலர் வரவழைக்கப்பட்டு வாள்வெட்டு சம்பவம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
காவல்துறையினர் கைது
இதன்போது எமது பிள்ளைகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது ஒருவர் காயங்களுக்குள்ளானார். இதைக் காரணமாக வைத்து எமது ஏழு பிள்ளைகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
எனினும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லை.
இந்நிலையில் தான் எமது பிள்ளைகள் மீது தேவையற்ற வகையில் போலியான வழக்குகள் காவல்துறையினரால் பதியப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியே இன்று மனித உரிமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்” என தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
