ஈழத் தமிழர்களின் நீதிக்கான தேடலிற்கு தீர்வளிக்க தீர்மானம்: பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் அறிவிப்பு
கன்சர்வேடிவ் கட்சியினுடைய மாநாடு நேற்று முன்தினம் (02) திங்கட்கிழமையன்று லண்டனின் மான்செஸ்டரில் உள்ள மிட்லாண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
வழமைபோல சிறப்பாக நடாத்தப்பட்ட இந்த மாநாட்டில் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் அமைச்சரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான தமது ஆதரவை அறிவித்தனர்.
நீதியின் முன் நிறுத்தப்படவில்லை
தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் எலியட் கொல்பர்ன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றிருந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார்.
கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் தலைவர், சிங்ஃபோர்ட் ஆர்.டி. இயன் டங்கன் ஸ்மித் "எல்லா குற்றங்களின் குற்றமும் இனப்படுகொலை ஆகும், இலங்கையில் நடந்திருப்பது கேள்விக்கு இடமின்றி இன்னொரு இனப்படுகொலை,தான்" என்று கூறியிருந்தார்.
அவரைத் தொடர்ந்து வடக்கு அயர்லாந்தின் முன்னாள் மாநிலச் செயலர் "உள்நாட்டுப் போரின் போது இழைக்கப்பட்ட கொடூரமான குற்றங்களுக்காக யாரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என்பது மிகவும் வெளிப்படையான உண்மையான ஊழல்" என்று தனது கருத்தினை முன்வைத்திருந்தார்.
இந்த நிகழ்வின் வாயிலாக இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இன்னல்கள் குறித்து தெரிந்துகொள்ள முடிந்தது அவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க இயலுமான முயற்சிகள் ஆற்றப்பட வேண்டும் என ஒருமனதாக மாநாட்டின் போது அனைவராலும் கருத்துரைக்கப்பட்டது.
மேலும் தமிழர்களுக்கு கன்சர்வேடிவ் கட்சி தொடர்ந்தும் ஆதரவளிக்க வேண்டியதன் அவசியமும் இங்கே வலியுறுத்தபட்டது.