இலங்கையில் நீதித்துறை துர்ப்பாக்கிய நிலையில்! கலையரசன் எம்.பி ஆதங்கம்
இந்த நாட்டில் நீதித்துறை ஒருபோதும் சுயாதீனமாக இயங்கவில்லை என்றும் அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கும், அபிலாஷைகளுக்கும் வளைந்துகொடுத்தே நீதித்துறை செயற்பட்டுக்கொண்டு இருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
இன்று (04) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதான உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொடர்ச்சியான அழுத்தங்கள்
நீதிபதிகள் தங்களுக்கு அச்சுறுத்தல் என்றும், சட்டத்திற்குட்பட்டு கடமைகளை செய்ய முடியாமல் இருப்பதாகவும் கூறி பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறுகின்ற நிலைமை என்பது நீதித்துறைக்கு இழுக்கு என்பதையன்றி வேறென்னவென்று சொல்ல முடியும்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அவர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறியமையின் பின்னணினியில் குருந்தூர்மலை விவகாரமும், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி விவகாரம் மற்றும் தியாகதீபம் திலீபனின் நினைவு ஊர்தி அஞ்சலிக்கான அனுமதி வழங்கியமை என பல பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நீதிபதி சரவணராஜாவின் மீது இராணுவப் புலனாய்வு, அரச புலனாய்வின் பார்வை என்பன இருந்ததன் காரணமாகவும் சரத் வீரசேகர போன்றவர்களின் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாகவும் ஏற்படுத்தப்பட்ட உயிர் அச்சுறுத்தலின் நிமித்தமே அவர் இந்த நாட்டைவிட்டு அவசர அவசரமாக வெளியேறியுள்ளார்.
இந்த விடயம் இந்த நாட்டுக்கும், நீதித்துறைக்கும் ஒரு சவாலான விடயமாகவே உள்ளது, எனவே இந்த நாட்டில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதற்கு இடமளிக்க வேண்டும்.
நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது இது முதல் முறை இல்லை. இதற்கு முன்னர் மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் ஜோசப் பரராசசிங்கத்தின் கொலை வழக்கிலும் அந்த வழக்குக்குரிய நீதிபதிக்கு தீர்ப்பினை மாற்றக்கோரி அழுத்தம் வழங்கப்பட்டமை மாத்திரமல்லாமல் கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ஹிஸ்புல்லா ஆலயம் இருந்த இடத்தை உடைத்து அங்கு சந்தை அமைத்த, வழக்கில் சட்ட நடவடிக்கைகளின் போது நீதிபதியை மாற்றி தனக்குச் சாதகமாக தீர்ப்பைப் பெற்றுக்கொண்ட சம்பவம் என நீதித்துறைக்கு அநீதி நடந்த சம்பவங்கள் பல உள்ளன.
இதிலிருந்து இதற்கு முன்னரும் இந்த நாட்டில் நீதித்துறை சுயமாக இயங்கவில்லை என்பதை கண்கூடாக காண முடிகிறது.
இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாக முறையான நீதியை பெற்றுத்தந்தது, நாட்டில் நீதியான ஆட்சி நடைபெற வழி செய்ய வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.