தினேஷ் ஷாப்டர் படுகொலை - 77 வாக்கு மூலங்கள் பதிவு..! சிக்கிய சந்தேகநபர்
பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில், சுமார் 77 வாக்கு மூலங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இரு முக்கிய சான்றுகளை மையப்படுத்தி மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது.
சி.ஐ.டி. பிரதி காவல்துறை மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், வங்கிக் கணக்குகள் சில தொடர்பிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சி.சி.ரி.வி. காட்சிகள் சில தொடர்பிலும் விஷேட அவதானம் செலுத்தப்ப்ட்டுள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.
51 வயதான தினேஷ் ஷாப்டர் கொழும்பு -07 பிளவர் வீதி பகுதியை சேர்ந்தவராவார். மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர், ஜனசக்தி காப்புறுதி குழுமம் உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைகளுக்கு சொந்தக் காரர் ஆவார்.
தினேஷ் ஷாப்டர் கொலை

பொரளை பொது மயான வளாகத்திற்குள் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் பிற்பகல் 3.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தார்.
இந் நிலையில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பொரலை காவல்துறை இந்த விவகாரத்தில் 17 வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதுடன் சி.ஐ.டி.யினர் 60 இற்கும் அதிகமான வாக்கு மூலங்களை பதிவுச் செய்துள்ளனர்.
தினேஷ் ஷாப்டரின் மனைவியிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில், கொலை நடந்த 15 ஆம் திகதி காலை முதல் திஷேஷ் ஷாப்டரின் நடவடிக்கையில் வித்தியாசம் இருந்ததாகவும், எனினும் அவர் அது குறித்த விடயங்களை தன்னுடன் பகிரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையிலான விசாரணையின் அடிப்படையில் ஷாப்டருக்கு மிக நெருக்கமான ஒருவருக்கு இக்கொலையுடன் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதற்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கையடக்கத் தொலைபேசி தரவு

ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசியில் உள்ள தரவுகளை பெற்றுக்கொள்ள சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவு தொடர்ச்சியாக முயன்றுவரும் நிலையில், அத்தரவுகளுடன் ஏனைய 3 பேரின் கையடக்கத் தொலைபேசி தரவுகளை ஒப்பீடு செய்து பகுப்பாய்வு செய்தால், மேலும் பல சான்றுகள் வெளிப்படும் என விசாரணையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதன் பிரகாரம் குற்றவாளியைக் கைதுசெய்வதற்கான பூரண விசாரணைகள் தொடர்ச்சியாக இடம் பெற்றுவருவதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது