இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைய வேண்டாம் : சிறிலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை
இஸ்ரேலின் எல்லைகளில் உள்ள இலங்கையர்கள் சட்டவிரோதமாக அந்த நாட்டுக்குள் நுழைவதை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென சிறிலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கிடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையிலேயே, பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
எல்லை தாண்டும் இலங்கையர்கள்
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கு இடையிலான போருக்கு மத்தியில், சட்ட விரோதமான முறையில் ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த இரு இலங்கையர்கள் அண்மையில் மீண்டும் ஜோர்தானிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், தற்போது இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
எனினும், சுமார் 32 இலங்கையர்கள் இஸ்ரேல் சிறைச்சாலைகளில் இன்னும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலில் காணாமல் போயுள்ள இலங்கையர்
அத்துடன், இஸ்ரேலில் காணாமல் போயுள்ள இலங்கையர் தொடர்பான தேடுதல் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்பான தகவல்களை திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸரேலில் உள்ள சிறிலங்கா தூதரகம் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக காமினி செனரத் யாப்பா மேலும் கூறியுள்ளார்.