செப்டம்பர் வரை மின் கட்டணம் உயர்த்தப்படாது : அரச தரப்பு அறிவிப்பு
மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு செப்டம்பர் மாதம் வரை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படமாட்டாது என துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இறுதியாக மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் நேரடி தாக்கம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கே ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இன்று (21) நாடாளுமன்றத்தில் ரவி கருணாநாயக்க எழுப்பிய வாய்மூல வினாவுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
டொலரின் பெறுமதி அதிகரிப்பு
இது குறித்து மேலும் விளக்கமளித்த அமைச்சர், "டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், மின்சாரக் கட்டணம் மேலும் உயருமா என்று நீங்கள் கேட்கிறீர்கள்.

ஆனால், இந்த விலை அதிகரிப்பின் நேரடி தாக்கம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே உள்ளது என்பதை நாம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். மற்றவர்களின் சுமையை அரசாங்கம் 15 பில்லியன் ரூபாவை மின்சார சபைக்கு வழங்கி தாங்கிக்கொண்டுள்ளது.
என்னால் ஒரு நேரடிப் பதிலைச் சொல்ல முடியும். செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு நாம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்க உத்தேசிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |