கம்பஹா ஒஸ்மனின் வங்கிக் கணக்குகளை ஆராய நீதிமன்றம் உத்தரவு!
பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான கம்பஹா ஒஸ்மன் என்பவரின் வங்கி கணக்குகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிற்கு (CCD) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளாார்.
குறித்த வழக்கு இன்று (06-07-2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப் பின்னணி
இது குறித்து மேலும் தெரியவருகையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விடுத்த கோரிக்கையினை அடுத்தே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பாதாள உலகக் கும்பலின் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்களில் ஒருவரான கம்பஹா ஒஸ்மனின் வங்கி கணக்குகள் மூலம் இடம்பெற்றுள்ள பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு முந்தைய வழக்குத் தவணைகளின் போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த தகவலின்படி, கம்பஹா ஒஸ்மனின் வீட்டிலிருந்து கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு எதிராக சர்வதேச காவல்துறையினரால் (Interpol) வெளியிடப்பட்ட சிவப்பு அறிவித்தல் (Red Notice) நகல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவுக்கு எதிரான குற்றப் பின்னணி விபரங்கள் அடங்கிய ஆவணத் தொகுப்பு (Pre-conviction record) ஒன்றும் அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டிருந்தமை நீதிமன்றத்தில் தற்பொழுது நினைவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |