முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இறைவனின் சாபம் இல்லாமல் போகுமா
2019இல் நடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் ஆதரவாளரான பிள்ளையான் செயற்பட்டுள்ளதாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படம் இலங்கை அரசியலில் முக்கிய பேசுபொருள் ஆகியுள்ளது.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்ட அரசியல் நலனுக்காகவே ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை அன்று கோத்தபாய ராஜபக்ச நடாத்தினார் என்றும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற குரல்களும் எழுகின்றன.
சர்வதேச விசாரணை கோரும் சஜித்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரியை கண்டுபிடிக்க இந்த நாட்டில் ஒருபோதும் விசாரணை நடாத்த முடியாது என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
இதனால் சர்வதேச விசாரணை ஒன்றை நடாத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் 2019 ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் கோத்தபாய ராஜபக்சவுக்கே வாக்களிக்குமாறு கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியதையும் சஜித் பிரேமதாச நினைவுபடுத்தியுள்ளார்.
இப்போது சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் வாக்குமூலங்களும் முக்கிய சாட்சியமாக இடம்பெற்றுள்ளன.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை நடத்தியது உண்மையில் யார் என்று கடந்த நான்கு ஆண்டுகளாக உண்மை வெளிவராத நிலையே நீடித்தது. அரசியலுக்காக இத் தாக்குதல் நடாத்தப்பட்டது என்பதை மைத்திரி தரப்பினரும் முஸ்லீம் அரசியல் தலைவர்களும் கூறிவந்த போதும் அது பற்றிய உண்மை வெளிச்சத்திற்கு வரவில்லை என்றே கூற வேண்டும்.
இது இலங்கையில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய விடயமாகவும் இருந்தது. உலகின் மிகப்பெரும் விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகளை சிதைத்த சிறிலங்கா அரசு, இலங்கையில் முப்பது ஆண்டுகளாக சிறிலங்கா அரசுக்கு பெரும் சவாலை ஏற்படுத்திய விடுதலை இயக்கத்தை உலக நாடுகளின் பலம் கொண்டு சிதைத்த சிறிலங்கா அரசுக்கு ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை மாத்திரம் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?
ரஞ்சித் ஆண்டகையின் சாபம்
இலங்கை அரசியலில் மாத்திரமின்றி சில உலக நாடுகளின் மத்தியிலும் இந்தக் கேள்வி எழுந்தது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி கண்டறியப்பட வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
அத்துடன் “ஈஸ்டர் தின கொலைக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பதை கடவுள் வெளிப்படுத்துவார். அதைச் செய்ய நாங்கள் அவரிடம் பிரார்த்தனை செய்கிறோம். கொடிய தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள இரகசியங்கள் மறைக்கப்பட அனுமதிக்க மாட்டோம்” என்றும் கடந்த ஆண்டு ஈஸ்டர் படுகொலை நினைவேந்தலின் போது அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை மற்றொரு விடயத்தையும் இவர் அழுத்தமாக உரைத்திருந்தமையை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். “கடந்த காலங்களில் நம் நாட்டின் சில அரசியல்வாதிகள் வன்முறையில் ஈடுபட்டு பலரைக் கொன்றமை போன்று, அவர்களும் வன்முறையான வகையில் மரணித்ததைப் பார்த்தோம்.
ஈஸ்டர் தின தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்களுக்கும் அதே விதி காத்திருக்கிறது” என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இப்போது ஈஸ்டர் படுகொலையின் பின்னால் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவே இருந்தார் என்பதை அவரது முன்னாள் சகாக்களின் ஊடாக சனல் 4 தொலைக்காட்சி ஊடகம் அம்பலம் செய்திருக்கிறது.
பெரும்பான்மையான சிங்கள மக்களும் சிங்களத் தலைவர்களும் இதனை ஏற்றுக்கொண்டு விவாதிக்கத் துவங்கியுள்ளனர்.
கொலைக்களம் எனும் ஆவணப்படம்
இந்த நிலையில் தான் சனல் 4 ஊடகம் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை யுத்தம் சார்ந்த சில ஆவணங்கள் கவனத்திற்கு உரியவை ஆகின்றன.
2011இல் சனல் 4 தொலைக்காட்சி கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. அதில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த போராளிகள் நிர்வாணமாக இருத்தப்பட்டு பிடரிகளில் மிகவும் கோரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
உலகம் சிறிலங்கா இராணுவத்தின் கோரச் செயல் கண்டு நடுங்கியது. போரில் பிள்ளைகளை இழந்த, காணாமல் போகக் கொடுத்த உறவுகள் அங்கே யார் கொல்லப்பட்டனர் என்று முகம் தெரியாமல் துடித்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடந்த போரின் இறுதியில் இலங்கை அரசின் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு இணங்க, பல ஆயிரம் போராளிகள் சரணடைந்தார்கள்.
பல ஆயிரம் போராளிகள் உயிருடன் இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டார்கள். பலர் குடும்பம் குடும்பமாக சரணடைந்தார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இன்றுவரையில் இலங்கை அரசு பதில் சொல்லாமல் இருக்கிறது
தமது கட்சிக்கும் தமது ஆட்சிக்கும் எதிராக ராஜபக்சவினர் செய்யும் அநீதிகளை அம்பலப்படுத்தும் அல்லது பேசும் சிறிலங்காவின் எதிர்தரப்பு ஆட்சியாளர்கள், தமிழர்கள் விடயத்தில் மாத்திரம் ஊமையாகி விடுகின்ற பாரபட்சத்தையும் அநியாயத்தையும் தொடர்ந்து கண்டு வருகிறோம்.
பாலச்சந்திரன் கொலை
அதேபோல 2013ஆம் ஆண்டில் சனல் 4 தொலைக்காட்சி மற்றொரு ஆவணப்படத்தை வெளியிட்டது. அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளைய மகன் பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து இலங்கை இராணுவத்தின் பதுங்குகுழியில் இருக்கும் காட்சிகளை வெளியிட்டதுடன், அப்பாவி சிறுவனான பாலச்சந்திரனின் மார்பில் இரும்புத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காட்சியையும் வெளியிட்டது.
போர்க்களத்தில் ஒரு அப்பாவிச் சிறுவனாக ஏதும் அறியாமல் சரணடைந்த பாலச்சந்திரனுக்கு பிஸ்கட்டை உண்ணக் கொடுத்துவிட்டு இரும்புத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொடூரம் சனல் 4 தொலைக்காட்சியால் வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தப்பட்டது.
ஈழ இறுதிப் போர்க்களத்தில் இதுபோன்ற அநீதிகள் பல இடம்பெற்றுள்ளன. போராளி ஊடகவியலாளர் இசைப்பிரியா அவர்களும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு மிகக் கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்ட ஆவணங்களும் வெளிக்கொணரப்பட்டன.
மனித குலத்திற்கு விரோதமான மிக மோசமான அநீதிச் செயல்களால் ஈழ இறுதிப் போர் மேற்கொள்ளப்பட்டே ஈழ மக்கள் தோற்டிகடிக்கப்பட்டனர் என்பதே உண்மை.
இன்று சனல் 4 தொலைக்காட்சி இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள ஆவணப்படத்தை ஏற்கும் சிங்களத் தலைவர்களும் சிங்கள ஊடகங்களும் சிங்கள மக்களும் மேற்குறித்த இந்த ஆவணப்படங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகவும் நிர்பந்தம் ஆகின்றது.
நீதியில் மட்டும் ஏன் பாரபட்சம்?
அதேபோன்று ஈஸ்டர் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வழியாகவே தீர்வு சாத்தியம் என்பதை ஏற்றுக்கொள்ளுகின்ற சஜித் பிரேமதாச போன்றவர்கள் ஒன்றரை இலட்சம் மக்கள் இல்லாமல் செய்யப்பட்ட ஈழ இறுதிப் போர் தொடர்பில் உண்மையை வெளிக்கொணரவும் நீதியை பெற்றுக்கொள்ளவும் சர்வதேச விசாரணை ஒன்றே வழி என்பதையும் ஏற்றுக்கொள்ளுவதே நியாயமாகும்.
சிங்களவர்களுக்கு ஒரு நீதி, ஈழத் தமிழர்களுக்கு ஒரு நீதி என்ற பாரபட்சத்தை இனியேனும் சிறிலங்கா தேசம் கைவிட வேண்டும் என்பதும் சிறிலங்காவின் நீதிக்கு ஒற்றை வழியாகிறது.
அதேபோன்று ஈஸ்டர் படுகொலைகளை நிகழ்த்திய குற்றவாளிகளுக்கு தண்டனையை கடவுள் வழங்குவார் என்று நம்பிக் காத்திருக்கும் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட இலட்சம் மக்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரம் பேருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதுடன் அதற்கு வழிமுறையாக இருக்கும் சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டும்.
இறைவனிடத்தில் நீதியும் கருணையும் பாரபட்சம் கொண்டதாக இருக்க முடியாது. தென்னிலங்கையில் நடந்த கொலைகளுக்கும் வடக்கு கிழக்கில் நடந்த கொலைகளுக்கும் இறைவனின் தண்டனையும் நீதியும் பாரபட்சமாக இருக்க முடியாது.
ஈஸ்டர் தின தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்களுக்கும் ''அதே வன்முறை விதி காத்திருக்கிறது'' என்று சொல்லும் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள், முள்ளிவாய்க்கால் படுகொலையின் பின்னால் உள்ளவர்களுக்கும் ''அதே வன்முறை விதி காத்திருக்கிறது'' என்று சொல்ல முன்வருவதும் நீதிக்கு வழிவிடுவதும்தான் இறைவனுக்கு உண்மையானது. அதுவே இலங்கை தீவின் நலனுக்காக மெய்யான பிரார்த்தனையாகவும் இருக்கும்.