மருத்துவத்துறையில் தடம் பதிக்கும் கூகுள் : புற்றுநோய்க் கலங்களை கண்டறியும் தொலைக்காட்டி
உலக அரங்கில் முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனம் நாளுக்கு நாள் புதிய விடயங்களை அறிமுகப்படுத்துவதில் தனது கவனத்தை செலுத்தி வருகிறது, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்திருப்பதை உணர்ந்துள்ள கூகுள் தற்போது மருத்துவ துறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தனது தடத்தினை பதிக்க தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனம் அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் இணைந்து ஏ.ஆர்.எம் (ARM) என அழைக்கப்படும் ஒக்மெண்டட் ரியாலிட்டி மைக்ரோஸ்கோப்பை (Augmented Reality Microscope) உருவாக்கியுள்ளது.
இந்த நுணுக்குக்காட்டியானது, மெஷின் லேர்னிங் (Mechine Learning) மற்றும் ஒக்மெண்டேட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை (Augmented Reality Technology) பயன்படுத்தி அதிநவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
உடனடித் தீர்வு
இந்த நுணுக்குக்காட்டியினைப் பயன்படுத்தி புற்றுநோய் கலங்களை நேரடியாக கண்டறிய உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஒளியியல் நுணுக்குக்காட்டியின் மூலம் நேரடியாக நோயாளியை பரிசோதனை செய்து முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க முடியும் என்றும் இதன் காரணமாக நோயாளியின் உடலில் ஏதேனும் அசாதாரணமான விடயங்களை மருத்துவர்கள் கண்டறிந்தால் அதற்கு உடனடியாக தீர்வு காணவும் முடியும் எனவும் கூகுள் நிறுவனம் கூறுகிறது.
இத்தைகைய விடயங்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நுணுக்குக்காட்டியானது இன்னமும் உத்தியோகபூர்வமாக பயன்பாட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
13 வகையான மாதிரி
ஏறத்தாழ 13 வகையான மாதிரி ஏஆர்எம் (ARM) கள் இருப்பதாகவும், இவற்றை அதிகாரப்பூர்வமாக மருத்துவ பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முன்னர் இன்னும் சில சோதனைகளை செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் பற்றி கூகுள் தனது பதிவில் “ஏற்கனவே மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சைப்பிரிவுகளில் இருக்கும் ஒளியில் நோக்கிகளை மறுசீரமைப்பு செய்வதே இதன் முக்கிய நோக்கம்” என்றும் குறிப்பிட்டுள்ளது.
சிஎன்பிசி(CNPC) யின் அறிக்கையின் படி அமெரிக்க பாதுகாப்புத் துறை இந்த செயற்கை நுண்ணறிவு நுணுக்குக்கட்டிகளை உருவாக்குவதற்காக கூகுளுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
இந்த நுணுக்குக்காட்டியை உருவாக்குவதற்கு 90,000 அமெரிக்க டொலர்கள் முதல் 1,00,000 அமெரிக்க டொலர்கள் வரை செலவாகுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்த நுணுக்குக்காட்டியால் மருத்துவத் துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகவும் குறிப்பாக புற்றுநோய் கலங்களை எளிதாக கண்டறிந்து, புற்றுநோய் தாக்கியுள்ளவர்களை குணப்படுத்துவது இந்த தொலைநோக்கியின் மூலமாக எளிதாக நிறைவேற்றப்படும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.