எரிபொருள் போக்குவரத்துக் கட்டண விவகாரம் : விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம்
எரிபொருள் போக்குவரத்துக்காக செலுத்தப்படும் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை பெட்ரோலிய தனியார் தாங்கி வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த கட்டணத்தை 20 சதவீதத்தால் அதிகரிக்குமாறு நேற்று (02) நடைபெற்ற கலந்துரையாடலின்போது கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் முன்வைத்துள்ள கட்டண அதிகரிப்பு முறைமை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக எதிர்வரும் 5ஆம் திகதி வரை கால அவகாசம் பெற்றுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டி.வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
யாழில் பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை - அதிபரின் அதிர வைக்கும் குற்றச்சாட்டு: அதிகாரிகள் தூக்கத்தில்..!
அரசாங்கத்திடம் கோரிக்கை
டீசல், டயர்கள், மின்கலங்கள், பராமரிப்புச் செலவுகள் மற்றும் ஊழியர்களின் வேதனம் உள்ளிட்ட தொழிலை நடத்துவதற்கான செலவுகளைக் கருத்திற்கொண்டு, எரிபொருள் போக்குவரத்துக்கான கட்டணத்தை அதிகரிக்குமாறு தனியார் தாங்கி வாகன உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

அத்துடன், போக்குவரத்துக் கட்டணத்தை நிர்ணயிக்கும் விலைச் சூத்திரத்தையும் அதற்கேற்ப திருத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எரிபொருள் விநியோகப் பணிகளில் இருந்து விலக நேரிடும் எனவும் தனியார் தாங்கி வாகன உரிமையாளர்கள் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தப் பின்னணியிலேயே, தனியார் தாங்கி வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கும் இடையில் நேற்று இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |