பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு ஆதரவு : இந்திய தூதரக பணியாளர் கைது
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நபரை, பயங்கரவாத தடுப்புப் படை(ATS) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உத்தரப்பிரதேசத்தின் ஷாமஹிதின்பூர் பகுதியைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சக பணியாளரான சதேந்திர சிவால் என்ற நபர், மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு உளவு பார்த்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
உயர்மட்ட தகவல்களைப் பகிர்ந்தமை
ஐ.எஸ்.ஐ அமைப்பிடம் பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்ந்த முக்கியமான உயர்மட்ட தகவல்களை அந்த நபர் பகிர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்திய இராணுவ தளபாடங்கள் குறித்த முக்கிய தகவல்களையும் ஐ.எஸ்.ஐ அமைப்பிடம் வழங்கியதாக உத்தரப்பிரதேச பயங்கரவாத தடுப்புப் படை வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை
ஐ.எஸ்.ஐ அமைப்பு சில தரகர்கள் மூலம், வெளியுறவுத்துறை அமைச்சக பணியாளர்களை பணத்தை காண்பித்து ஆசை வார்த்தை கூறி, அவர்கள் மூலம் முக்கிய தகவல்களை பெற்று வருவதாக பயங்கரவாத தடுப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சதேந்திர சிவாலிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |