கடந்த அரசாங்கங்களின் 30 முக்கிய புள்ளிகளுக்கு பேரிடி! விசாரணைகள் தீவிரம்
கடந்த அரசாங்கத்தில் சக்திவாய்ந்த பதவிகளை வகித்த சுமார் முப்பது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, 2020 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பதவிகளில் இருந்த முக்கிய அரசியல்வாதிகளே இந்த விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த விசாரணைகளில் சில, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
சட்டவிரோத சொத்துக்கள்
மேற்படி விசாரணைகளில், சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, மகிந்த அமரவீர, கஞ்சன விஜேசேகர, மனுஷ நாணயக்கார, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் அடங்குவதாக கூறப்படுகிறது.

அரசியல்வாதிகள் மட்டுமன்றி, பல்வேறு அமைச்சகங்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரிந்து, சட்டவிரோதமான முறையில் சொத்துக்களைச் சேர்த்துள்ள பெருமளவிலான உயர் அதிகாரிகளின் சொத்து விபரங்களும் தற்போது அவசரமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருதவதாக தெரியவருகிறது.
பல்வேறு அரசு நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் பொதுப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, கடந்த காலங்களில் புலனாய்வு அமைப்புகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஏராளமான முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |