தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு- தனிமைப்படுத்தும் நடவடிக்கை!
பருத்தித்துறை தும்பளையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தும்பளையில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அவரது இறுதிச்சடங்கிற்கு பலர் சென்றுள்ளனர். இதன் காரணமாக இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் மற்றும் பூசகரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாணத்தில் வங்கி ஒன்றில் பணியாற்றுகின்றார். அவருக்கு நேற்று முன்தினம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தன.
இருப்பினும் அதன் பெறுபேறுகள் கிடைக்கப்பெறவில்லை. இந்த நிலையிலேயே வங்கியாளரின் தந்தை உயிரிழந்துள்ளார். இறுதிச் சடங்கு நேற்று இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை வங்கியாளருக்கு கொவிட்-19 நோயத்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அதனால் வங்கியாளரின் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள், கிரியை செய்த பூசகர் உள்ளிட்டோரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னெடுத்துள்ளனர்.