சீனாவில் இருந்து ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு! ஈரானில் மீண்டும் தாக்குதல்
சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை "தொடரும்" (To be continued!) என்ற வாசகம் மூலம் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்ஜிங்கில் இருந்து தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
அதில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடனான சந்திப்பு மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து நீண்ட விளக்கம் ஒன்றை அளித்துள்ள ட்ரம்ப், தனது 16 மாத கால ஆட்சியில் அமெரிக்கா அடைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் வெனிசுலா உடனான உறவு குறித்துப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மீண்டும் தாக்குதல்கள்
இந்த நிலையில், ஈரானின் இராணுவ வலிமையைச் சீர்குலைத்த நடவடிக்கை இன்னும் முழுமையடையவில்லை என்பதையும் அவர் அதில் கோடிட்டு காட்டியுள்ளார்.

தற்போது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு பலவீனமான போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ள சூழலில், ட்ரம்பின் இந்தக் கருத்து தாக்குதல்கள் மீண்டும் தொடங்கப்படலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவுக்குப் புறப்படுவதற்கு முன்னதாகவே, ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, இப்பிரச்சினையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ள போதிலும், ட்ரம்பின் இந்த கருத்துக்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |