சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்தம்: நாமல் - ஜானகி இருவருக்கும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' ஒப்பந்தம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நீடித்துள்ளது.
இதன்படி நாமல் ராஜபக்ச, கிரிஷ் குழுமத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் வர்த்தகப் பிரமுகரான ஜானகி சிறிவர்தன ஆகியோரை, எதிர்வரும், ஒக்டோபர் 16 வரை மேலும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சமர்ப்பித்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
சற்றுமுன் நாமல் நீதிமன்றத்தில் முன்னிலை
சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் உள்ள பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இன்று (06) சற்று நேரத்திற்கு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில், கொழும்பு கோட்டை பகுதியில் 'கிரிஷ்' திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியை அடிப்படையாகக் கொண்டு, முறைகேடான முறையில் நிதி கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட சிலருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடு திரும்பிய முன்னாள் முதற்பெண்மணி
இதேவேளை, சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு நாடு திரும்பிய முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்மைய எதிர்வரும் 13 ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |