மியான்மாரில் நிலநடுக்கம்: தாய்லாந்தில் அழிந்த 33 மாடி கட்டடம் : விசாரணைக்கு உத்தரவு
மியான்மர்(myanmar) நிலநடுக்கத்தின் தாக்கத்தால் தாய்லாந்தின் பாங்கொக்கில் 33 மாடி கட்டிடம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது குறித்து முறையான விசாரணைக்கு பிரதமர் பாம் பின் மின் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் அழிக்கப்பட்ட ஒரே கட்டிடம் 137 மீட்டர் உயரமுள்ள முடிக்கப்படாத கட்டிடம் என்றும், எனவே அதன் கட்டுமானத்தின் தரம் குறித்து கவலைகள் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
சிக்கிய 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்
சீன பொறியியல் நிறுவனத்தால் கட்டப்பட்டு வந்த இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தபோது, அதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இடிபாடுகளில் சிக்கி 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டாலும், மேலும் 75 பேர் இடிபாடுகளுக்குள் புதைந்து கிடக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சீன பொறியியல் நிறுவன அதிகாரிகள் கைது
அவசரகால பேரிடர் விதிமுறைகளை மீறி இடிபாடுகளிலிருந்து ஆவணங்களின் அடுக்கை அகற்ற முயன்றதாகக் கூறி, இடிந்து விழுந்த கட்டிடத்தின் கட்டுமானப் பொறுப்பில் இருந்த பொறியியல் நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளை தாய்லாந்து காவல்துறை கைது செய்துள்ளது.
மேலும் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பொருட்களை தர ஆய்வுக்கு உட்படுத்த தாய்லாந்து தொழில்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
