நெல்லியடியில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்கள் முன்னெடுப்பு
இலங்கை தமிழரசு கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் முன்னெடுப்பில், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், உள்ளூர் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நெல்லியடி நகரில் அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் மையத்தில் மாவீரர்களுக்கான இறுதி நாள் நினைவு தினம் கார்த்திகை 27 மாலை 6.05 மணியளவில் மரியாதையுடன் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வின் தொடக்கமாக, மாவீரர் மேஜர் துளசி அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் அவரது சகோதரர் பொதுச்சுடரை ஏற்றி வைத்து வீரமரணமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த மரியாதை செலுத்தினார்.
பொதுச்சுடர் ஏற்றத்தின் பின்னர், துயிலுமில்ல பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு, நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் அமைதியான சூழலில் மாவீரர்களின் உயிர்தியாகத்தை நினைவு கூர்ந்தனர்.
நெல்லியடி மாவீரர் நினைவேந்தல் மையத்தை சூழ்ந்திருந்த ஒளிக்கதிர்கள், மலர்மாலை அஞ்சலிகள் மற்றும் மெழுகுவர்த்திகளின் பிரகாசம் நிகழ்விற்கு மேலும் உணர்ச்சி பூர்வமான சூழலை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராட்ட செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களின் குறிப்பிடத்தகுந்த பங்கேற்பு காணப்பட்டது.
அனைவரும் இணைந்து, தாயகம், மொழி மற்றும் மக்கள் உரிமைக்காக உயிர்தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |