வட மாகாண கல்விப் புலத்தில் குளறுபடிகள்! NPP எம்.பிக்கள் தொடர்பில் ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
வட மாகாண கல்விப் புலத்தில் என்றுமில்லாதவாறு அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. பதவி நியமனங்களின் போது தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களாக செயற்படுபவர்களுக்காக பரிந்துரைக்கும் செயற்பாடுகளில் அரசாங்க எம்.பிக்கள் செயற்படுகின்றனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரின் தலையீடுகள் எல்லைமீறி செல்லுகின்றன.
பாடசாலை நிகழ்வுகளில் அரசியல் வாதிகள் செல்லக்கூடாது என்ற தேசிய மக்கள் சக்தியின் பிரதமரின் கூற்று வெறும் வாய்ப்பேச்சோடு நின்றுவிட்டது.
அரசாங்க ஆதரவாளர்கள்
தம்மை அரசாங்க ஆதரவாளர்களாக காட்டி, அரசாங்க தரப்பு அரசியல்வாதிகளை பாடசாலைகளுக்கு அழைத்து குறுக்கு வழிகளில் வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் கீழ்நிலைக்கு சில பாடசாலை அதிபர்கள் செல்லும் நிலைக்கு, வட மாகாணத்தின் கல்வியில் அரசியல் தலையீடு அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களில் அமுக்கக் குழு போன்று நாடகமாடி, ஆசிரியர்களின் உரிமை பற்றிப் பேசியிருந்த ஜே.வி.பி. சார்பு ஆசிரியர் தொழிற்சங்கம், இன்று அரசாங்க அமைச்சர்களாலும் பிரதி அமைச்சர்களாலும் ஆட்கொள்ளப்பட்டு, ஏனைய தொழிற்சங்களை நசுக்கும் செயற்பாட்டிலும், கல்விப்புலத்தை அச்சுறுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறார்கள்.
பிரதி அமைச்சர்களாகவும் இருந்துகொண்டு, ஜே.வி.பி சார்பு ஆசிரியர் சங்கத்தின் செயலாளர்களாகவும் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வடமாகாண ஆளுநருடன் அமைச்சர்களாக அமர்ந்துகொண்டு, தமது தொழிற்சங்கத்துடனான சந்திப்பு என்ற போர்வையில் வட மாகாண அதிகாரிகளை மிரட்டுகிறார்கள்.
இதுபோன்ற அரசியல் தலையீடுகள் முன்பிருந்த எந்த ஆட்சியிலும் நடைபெற்றதில்லை. வடமாகாணத்தில் நடைபெறும் இடமாற்றங்களில் இடமாற்றச்சபை, மேன்முறையீட்டு சபையின் தீர்மானங்களை மீறி, அரசாங்க சார்பு தொழிற்சங்கமாக காட்டி அதிகாரிகளை அச்சுறுத்தி ஒருதலைப்பட்சமான முடிவுகளை திணிக்க முயல்கிறார்கள்.
இடமாற்றச் சபைகளின் தீர்மானங்களையே ஒருதலைப்பட்சமாக மாற்றியமைக்க செயற்படும் அதேவேளை, தமது ஆதரவாளர்களுக்கு இடமாற்ற மேன்முறையீட்டு சபையின் அங்கீகாரமின்றி, வடமாகாண ஆளுநரைக் கொண்டு இடமாற்றங்களை நிறுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறார்கள்.
வடமாகாண ஆளுநர் தன்னிச்சையாக இடமாற்றங்களை நிறுத்தும் அளவுக்கு அரசியல் தலையீடுகள் எல்லை மீறியுள்ளன அத்துடன் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுகிறார்கள்.
தமது பதவி நிலையை மீண்டும் குறுக்கு வழியில் பெற்றுக்கொள்வதற்காக வடமாகாணத்தின் கல்வித் திணைக்களத்திலுள்ள மேலதிக அதிகாரி ஒருவரும், தனது எதிர்கால வரப்பிரசாதங்களை பெறுவதற்காக, ஜே.வி.பி. சார்பு ஆசிரியர் தொழிற்சங்கத்தின் நிகழ்ச்சிநிரலில் செயற்படுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இடமாற்றங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலில் நடக்கும் செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் முற்றாக எதிர்க்கின்றது.
இத்தகைய அரசியல் தலையீடுகளை எதிர்க்கும் முகமாக 2025.09.24ம் திகதி வடமாகாணத்தில் சேவையின் தேவை கருதிய இடமாற்றம் தொடர்பான, இடமாற்ற சபையை இலங்கை ஆசிரியர் சங்கம் புறக்கணித்து வெளியேறியுள்ளது.
குறித்த சில முறைகேடுகள் மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.
இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் முற்றாக தவிர்க்கப்படவேண்டும். இதுபோன்ற செயற்பாடுகள் தொடருமாயின் இலங்கை ஆசிரியர் சங்கம் பரந்துபட்ட தொழிற்சங்க செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
