இன்றுடன் விடைபெற்றுச் செல்லும் எலிசபெத் மகாராணியின் இறுதி பயணம்..! (காணொளி)
புதிய இணைப்பு
பிரித்தானிய மகாராணி இரண்டாம் ஆம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்திற்கான ஆயுத்தங்கள் லண்டனில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிபெத்தின் இறுதி கிரியை இலங்கை நேரப்படி, இன்று நள்ளிரவு 11.59க்கு நடைபெறவுள்ளது.
மகாராணியின் உடலை தாங்கிய பேழை சமய நிகழ்வுகளுக்காக பிரித்தானிய நேரப்படி காலை 11 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
பின்னர் மகாராணியின் உடல் ஊர்வலமாக வின்ட்சர் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டு வின்ட்சரில் உள்ள மன்னர் ஐந்தாம் ஜோர்ஜ் ஞாபகார்த்த தேவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
மகாராணியின் இறுதி சடங்கு நேரலையில்
முதலாம் இணைப்பு
70 ஆண்டுகாலமாக பிரித்தானியாவின் மகாராணியாகவிருந்த இரண்டாம் எலிசபத் கடந்த 8 ஆம் திகதி தமது 96 வயதில் காலமனார்.
26 வயதில் பிரித்தானியாவின் மகாராணியாக மகுடம் சூடிய இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
ஸ்கொட்லாந்தில் உள்ள பெல்மொரல் மாளிகையில் மருத்துவ கண்காணிப்பில் இருந்த நிலையில் இரண்டாம் எலிசபத் காலமானார்.
மகாராணியின் பூதவுடல் தாங்கிய பேழை தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து தமது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
இன்று இறுதி கிரியை - 125 திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு
பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிபெத்தின் இறுதி கிரியை இலங்கை நேரப்படி, இன்று நள்ளிரவு 11.59க்கு நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் பிரிட்டனில் உள்ள சுமார் 125 திரையரங்குகளில் ஒளிபரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் பொது விடுமுறை
அந்த மாபெரும் நிகழ்வைக் காண பூங்காக்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் திரைகள் அமைக்கப்படும். வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) நடைபெறவிருக்கும் இறுதிச்சடங்கும் அதன் தொடர்பில் லண்டனில் இடம்பெறும் ஊர்வலங்களும் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராணியின் இறுதி நிகழ்வில் பல நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படைகளின் 10 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அஞ்சலி செலுத்திய ரணில்
மறைந்த பிரித்தானிய மகாராணியின் பூதவுடலுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ரணில் விக்ரமசிங்க தமது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அதிபர் விக்ரமசிங்க நேற்று முன்தினம் (17) அதிகாலை இங்கிலாந்து நோக்கி பயணமானார்.
இலங்கையில் தேசிய துக்கதினம் பிரகடனம்
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை அடுத்து இன்றைய தினத்தை சிறிலங்கா அரசாங்கம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
இதன்படி, இலங்கையில் இன்றைய தினம் விசேட அரச விடுமுறையாகவும் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய அரச நிறுவனங்களில், தேசிய கொடியினை அரை கம்பத்தில் பறக்க விடுமாறும் பொது நிர்வாக அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
ஆறு நாடுகளுக்கு அழைப்பு இல்லை
இதேவேளை, மகாராணியின் இறுதிச் சடங்கிற்காக, நாடுகளின் அரசியல் தலைவர்கள் முதல் தனித்துவமான அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பிரமுகர்கள் வரை பல விருந்தினர்கள் இங்கிலாந்துக்கு சென்ற வண்ணமுள்ளனர்.
மகாராணியின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ விருந்தினர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், சரவதேச ஊடகமொன்று வெளியிட்ட தகவலின்படி ஆறு நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்களுக்கு நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
இதன்படி ரஷ்யா, பெலாரஸ், ஆப்கானிஸ்தான்,மியன்மார், சிரியா, மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கே அழைப்பு அனுப்பப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யா கடும் கண்டனம்
இதேவேளை, மகாராணி 2 ஆம் எலிசெபத்தின் இறுதி நிகழ்விற்கு ரஷ்ய ராஜதந்திரிகர்கள் எவருக்கும், பிரித்தானியா அழைப்பு விடுக்காமைக்கு ரஷ்யா தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான மொஹமட் பின் சல்மான், மறைந்த மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் இறுதி நிகழ்வில் பங்கேற்கமாட்டார் என பிரித்தானிய வெளியுறவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதி நிகழ்வுக்கு, சவுதி அரேபிய இளவரசருக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதனை மனித உரிமை அமைப்புகள் விமர்சித்திருந்தன. இதனையடுத்து சவூதி அரேபியாவின் முடிவுகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.