காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்துக்கான திட்டம் முன்வைப்பு!
காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் திறனைக் கட்டியெழுப்புதல் மற்றும் மையப்படுத்தப்பட்ட ஆராய்ச்சிக்கான இடத்தை உருவாக்குதலே சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் நோக்கமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொப் 28 எனப்படும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான கூட்டுத் திட்டமாக ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்துக்கான திட்டத்தை அவர் முன்வைக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டத்தையும் இதன்போது அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார்.
நிலைபேறான அபிவிருத்தி
உலக வெப்பமயமாதலின் சவாலை எதிர்கொள்ளுதல் மற்றும் வெப்ப வலய நாடுகளுக்கு நிலைபேறான அபிவிருத்தியை உறுதிசெய்வதை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
2030ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் இலக்கை அடைவதற்கான நிச்சயமற்ற தன்மைகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது. இந்த இலக்கை அடைவதற்காக 50 சதவீதம் வாய்ப்புள்ளது.
வெப்பவலயக் காலநிலை அபிலாஷைகளுக்கான திட்டம்
இதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் வெப்பவலய நாடுகளுக்கும் வெப்பவலயத்தில் அல்லாத நாடுகளுக்கும் அரச மற்றும் தனியார் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
காடுகள், சதுப்பு நிலங்கள் போன்ற அத்தியாவசிய இயற்கை வளங்களை மையமாகக் கொண்ட முதலீடுகளை ஈர்ப்பதே இந்த வெப்பவலய காலநிலை அபிலாஷைகள் திட்டத்தின் நோக்கமாகும்.
உலக வெப்பமயமாதலை தடுப்பதற்கு இந்த முதலீடுகள் அவசியம். இதன் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிராக வருடாந்தம் செலவிடப்படும் டிரில்லியன் கணக்கான டொலர்களை மீதப்படுத்த முடியும்.
வெப்பவலயக் காலநிலை அபிலாஷைகளுக்கான திட்டத்தை ஆராய்ந்து அறிக்கையிட நிபுணர் குழுவொன்றை நியமிக்கப்பட வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |