காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட முதிர்ச்சி பெறாத சிசு ஒன்றின் எச்சங்கள்
முல்லைத்தீவு ஐயன்கன்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஐயன்கன்குளம் காட்டுப் பகுதியில் முதிர்ச்சி பெறாத சிசு ஒன்றின் எச்சங்கள் நேற்றைய தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கால்நடை மேய்ப்பதற்காக சென்ற நபர்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு நேற்று சென்ற நீதிமன்ற அதிகாரிகள், தடயவியல் காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று குறித்த இடத்திலிருந்து எச்சங்களை மீட்டுள்ளனர்.
குறித்த பகுதிக்கு நேற்றைய தினம் வருகை தந்த மாவட்ட பதில் நீதவான் எச்சங்களை பார்வையிட்டார்.
முதிர்ச்சி பெறாத சிசு

அதேவேளை, எச்சங்களை பார்வையிட்ட சுகாதார வைத்திய உயரதிகாரி, குறித்த எச்சங்கள் முதிர்ச்சி பெறாத சிசு ஒன்றின் எச்சங்கள் எனவும் சட்டவிரோத சிசு கருக்கலைப்பு ஒன்றின் மூலம் பிரசவிக்கப்பட்ட சிசுவின் எச்சங்களாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் சிசுவின் மண்டை ஓடு மற்றும் என்புகள், சுற்றப்பட்டிருந்ந துணிகள் என்பன மீட்கப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில் ஐயன்கன்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.